ஐ.ஐ.டி., கோட்டா ‘சீட்’களுக்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்
ஐ.ஐ.டி., கோட்டா ‘சீட்’களுக்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்
UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 03:07 PM
மும்பை: ஐ.ஐ.டி., அட்மிஷனில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அந்த இடங்களுக்கு போட்டி போடும் மாணவர்கள் எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில், ஒரு ‘சீட்’டுக்கு 72 பேர் வீதம் போட்டி போடுகின்றனர்.
இந்தியாவின் உயரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. ஐ.ஐ.டி.,க்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது.
ஏற்கனவே ஏழு ஐ.ஐ.டி.,க்கள் உள்ளன. இத்துடன், புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,க்கள் இந்தாண்டு சேர்கின்றன. பழைய ஐ.ஐ.டி.க்களில், 27 சதவீத ஒதுக்கீட்டை, மூன்று ஆண்டாக படிப்படியாக பிரித்து ஒதுக்கீட்டை அமல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்தாண்டு, இந்த கல்வி நிலையங்களில் 9 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தாண்டு, பழைய ஐ.ஐ.டி.,க்களில் 18 சதவீத இடங்கள் தரப்படுகின்றன. புதிய ஐ.ஐ.டி.,க்களில் முழுமையாக 27 சதவீத ஒதுக்கீட்டை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரித்துள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், பணக்காரர்களுக்கு அதிக இடங்கள் போய்ச்சேருவதை தடுக்க, வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, வருமான வரம்பை நிர்ணயிக்கும் வகையில், ‘கிரீமி லேயர்’ முறையை கொண்டு வரும்படி கோர்ட் உத்தரவிட்டது.
கடந்தாண்டு, 8 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை பெற 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; இந்தாண்டு, பொதுப்பிரிவினர் உட்பட மொத்தம் விண்ணப்பித்துள்ளவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்து 95 ஆயிரம் பேர்.
பிற்படுத்தப்பட்டோர் உட்பட எல்லா பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை பெறுவதற்காக ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரம்; இதனால், ஒரு ‘சீட்’டுக்கு 72 பேர் போட்டி போடும் நிலை உருவாகி உள்ளது.
பொதுப்பிரிவினரில் ஒரு ‘சீட்’டுக்கு 62 பேரும், தாழ்த்தப்பட்ட பிரிவில் ஒரு ‘சீட்’டுக்கு 40 பேரும், பழங்குடியினரில் ஒரு ‘சீட்’டுக்கு 28 பேரும் போட்டி போடுகின்றனர். ‘பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது, ‘கிரீமி லேயர்’ வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
அதனால் தான், 80 சதவீதம் மதிப்பெண் வாங்கிய மாணவ, மாணவிகள், ஐ.ஐ.டி., யில் சேர விரும்புகின்றனர். அதனால் தான் அதிகளவில் இந்தாண்டு விண்ணப் பம் குவிந்துள்ளது’ என்று ஐ.ஐ.டி., தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
