UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM
ADDED : ஜூன் 28, 2014 10:31 AM
தமிழகத்தில், வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் ரத்தசோகையைப் போக்க, வாரந்தோறும் இலவசமாக இரும்புச் சத்து மாத்திரைகள் தரும் பணியை அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வடிவேலன் கூறியதாவது: தமிழகத்தில் 60 லட்சம் பேர் வளர் இளம் பருவ வயதில் உள்ளனர். இவர்களுக்கு ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க வியாழக்கிழமை தோறும் ரத்த சோகை நீக்கும் மாத்திரைகள் தரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிகள் மூலமாகவும், பள்ளி செல்லாமல் வீடுகளில் உள்ள 10 - 19 வயது வரையிலானோருக்கு அங்கன்வாடிகள் மூலமாகவும் மாத்திரைகள் தரப்படுகின்றன. இதுதவிர ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடல் புழு நீக்கும் அல்பண்டசோன் மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இதனால் வளர் இளம் பருவத்தினர், சிறந்த உடல் நலன், சிந்தனை, செயல் திறனையும் பெறுவர்; முடி உதிர்வது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.