"வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறை"
"வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறை"
UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 12:52 PM
மதுரை: இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது என, மதுரையில் மைக்ரோ சாப்ட் இந்தியாவிற்கான இயக்குனர் ரஜனீஷ் மேனன் தெரிவித்தார்.
மதுரையில்நேட்டீவ் லீடு பவுண்டேஷன் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு கருத்தரங்கு நடந்தது. அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரி தகவல் தொழில் நுட்பத்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் சிவராஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா பங்கேற்றனர். இந்தியாவிற்கான மைக்ரோ சாப்ட் இயக்குனர் ரஜனீஷ் மேனன் பேசினார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மைக்ரோ சாப்ட் நிறுவனம் பிஸ்னஸ் பார்க், ஜம்சார்ட், பாட்னர்ஷிப் திட்டங்கள் மூலம் தகவல் தொழில் நுட்பத்துறை மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை எடுக்கிறது. பிஸ்னஸ் பார்க் சார்பில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து சாப்ட்வேர் மேம்பாடு, இளைஞர்களின் புதிய ஐடியாக்களை பயன்படுத்தி தொழில் முனைவுக்கு வழி செய்கிறது.
கல்லுாரி மாணவர்கள் உட்பட இளைஞர்களின் சாப்ட்வேர் திறனை ஊக்குவிக்க, நேட்டீவ் லீடு பவுண்டேஷனுடன் இணைந்து வரும் செப்.,ல் போட்டி நடத்துகிறது. ஜம்சார்ட் திட்டத்தில் இளம் தொழில் முனைவோர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் தங்களை பதிவு செய்யலாம். அவர்கள் 1800 200 2114 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சாப்ட்வேர் அப்ளிகேஷனை சந்தைபடுத்துவது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஆலோசனைகளை இலவசமாக பெறலாம்.
இந்தியாவில் கடந்தாண்டு தகவல் தொழில் நுட்ப துறையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. உலக பொருளாதார மந்த நிலை மற்ற துறைகளை போல, இத்துறையையும் பாதித்தது. தற்போது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. மத்திய அரசும் புதிய தொழில் நுட்பங்களை ஊக்குவித்து வருகிறது, என்றார்.
