உலக செஸ் போட்டியில் பங்கேற்க முடியாமல் மாற்றுத்திறனாளி தவிப்பு
உலக செஸ் போட்டியில் பங்கேற்க முடியாமல் மாற்றுத்திறனாளி தவிப்பு
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 12:12 PM
திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்ற வீராங்கனை, ஆகஸ்ட் மாதம் நார்வே நாட்டில் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.
திருச்சி அடுத்த பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காணிக்கை இருதயராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகள் ஜென்னிதா ஆன்டோ, 36. மூன்று வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பில் நடக்க முடியாத நிலைக்கு ஆளான ஜென்னிதா ஆன்டோவுக்கு செஸ் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
2008ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்தியா சார்பில் ஜென்னிதா ஆன்டோ உள்ளிட்ட ஐந்து பேர் பங்கேற்றனர். இதில் ஜென்னிதா ஆன்டோ 25வது இடத்தை பிடித்தார். தொடர்ந்து 2010ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த போட்டியில் ஜென்னிதா ஆன்டோவுக்கு மாஸ்டர் வீராங்கனை பட்டம் கிடைத்தது.
கடந்தாண்டு ஜூன் மாதம் செக் குடியரசில் நடந்த 39வது உலக செஸ் சாம்பியன் (மாற்றுத்திறனாளி பெண்கள்) போட்டியில் சாம்பியன் பட்டத்தையும், நேஷனல் மாஸ்டர் பட்டத்தையும் ஜென்னிதா ஆன்டோ பெற்றார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி நார்வே நாட்டில் நடக்கவுள்ள பீடே 41வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன் போட்டியிலும், செப்டம்பர் 15ம் தேதி செர்பியா நாட்டில் நடக்கவுள்ள 14வது ஐ.பி.சி.ஏ. மாற்றுத்திறனாளி சாம்பியன் செஸ் போட்டியிலும் பங்கு பெற ஜென்னிதா ஆன்டோவுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் வெளிநாடு செல்ல போதிய பொருளாதார வசதி இல்லாமல் ஜென்னிதா ஆன்டோ தவித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நார்வே, செர்பியா நாடுகளில் நடக்கவுள்ள உலக செஸ் போட்டிகளில் பங்கேற்க போதிய வசதி இல்லை. மேலும் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு என்னால் தனியாக செல்ல முடியாது. தந்தை உடன் வருவதால் இரட்டிப்பு செலவாகிறது. இதனால் ஸ்பான்ஸர் அளிக்க தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முன் வந்தால் திறமையாக விளையாடி அவர்களுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பேன் என்றார்.
நடக்க முடியாத நிலையிலும் செஸ் போட்டிகளில் பங்கேற்று சாதிக்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜென்னிதா ஆன்டோவுக்கு உதவ விரும்புகிறவர்கள் 91718-16985 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

