நிரந்தர கட்டட வசதி இல்லாததால் அவதிப்படும் கல்லூரி மாணவர்கள்
நிரந்தர கட்டட வசதி இல்லாததால் அவதிப்படும் கல்லூரி மாணவர்கள்
UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM
ADDED : ஜூலை 17, 2014 01:04 PM
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நிரந்தர கட்டட வசதி இல்லாததால் ஷிப்ட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக திருவெண்ணெய்நல்லூரில் கடந்த 2010ம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழக நேரடி கட்டுப்பாட்டில் உறுப்புக் கல்லூரி துவக்கப்பட்டது.
ஷிப்ட் முறை
தற்காலிகமாக மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தில் திறக்கப்பட்டது. கல்லூரி துவங்கி ஐந்தாம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையிலும் நிரந்தர கட்டடம் இல்லை. 1,249 மாணவ, மாணவிகள் படிக்கும் இக்கல்லூரியில் 12 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் ஷிப்ட் முறை கொண்டுவரப் பட்டுள்ளது. இதனால் கல்வித் திறன் முழுமையாக பாதிக்கிறது.
இக்கல்லூரியில் 75 சதவீதம் பெண்களே படிக்கின்றனர். இந்த இடத்தில் கடந்த 2007ம் ஆண்டில் 900 மாணவிகள் மேல் நிலைப் பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாலே புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட் டது. தற்போது கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்க வசதியில்லை.
கானல் நீர்
ஆய்வகம், நூலகம் அமைக்க பல்கலை உத்தரவிட்டிருந்தாலும், இட வசதியின்றி, கம்ப்யூட்டர், இயற்பியல் ஆய்வகங்களில் மாணவர்கள் பயிற்சி எடுக்க முடியவில்லை. நூலகத்திற்கு பீரோக்கள், புத்தகங்கள் இருந்தாலும் பயனுள்ள புத்தகங்களை எடுத்து படிக்க முடியவில்லை. வேதியியல் பாடத்திற்கு ஆய்வகப்பயிற்சிக்கு திருக்கோவிலூர் தனியார் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது.
வசதிகள் இல்லை
இக்கல்லூரியில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. மாறாக மாணவ, மாணவியர் கல்லூரிக்கு மிக அருகிலுள்ள கோவிலுக்கு செல்லும்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இத்துடன் கல்லூரிக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை.
இடம் தேர்வு
இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட 2010ம் ஆண்டில் ஒதுக்குப்புறமான மணக்குப்பம் கிராம எல்லையில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்தனர். அப்போதைய அமைச்சர் பொன்முடி, மாணவியரின் பாதுகாப்பு கருதி மாற்று இடத்தை தேர்வு செய்ய கலெக்டர் பழனிச்சாமியிடம் கூறினார்.
கட்டடம் கட்ட 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின், திருவெண்ணெய்நல்லூரில் மலட்டாற்றின் ஓரம் உள்ள புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிகள் கிடப்பில் உள்ளன. இதுவரை கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யவில்லை.
முதுநிலை படிப்பு
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் திருவள்ளுவர் பல்கலையின் முதுநிலை பட்ட மேற்படிப்பு மையம் துவக்க 40 ஏக்கர் இடம் தேர்வு செய்து கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இப்பணியும் கிடப்பில் போனது. தற்காலிகமாக விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மையம் செயல்படுகிறது.
நடவடிக்கை தேவை
நிரந்தர கட்டட வசதியின்றி ஐந்து ஆண்டுகளாக கல்லூரி செயல்படுவதால் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. போதிய வகுப்பறையின்றி ஷிப்ட் முறை கொண்டு வந்ததால் மாணவர்களின் கல்வித்திறன் பெரிதும் பாதித்துள்ளது. அக்கறையுள்ள அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மனது வைத்தால்தான் திருவெண்ணெய்நல்லூர் கல்லூரிக்கு வழி பிறக்கும்.
