UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM
ADDED : ஜூலை 17, 2014 02:43 PM
சென்னை: மருத்துவ மாணவ, மாணவியர் இஷ்டம் போல் உடை அணிந்து வர அனுமதிக்க கூடாது என, கல்லூரி முதல்வர்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, இன்னும் சில நாட்களில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், செப்., 1 முதல் துவங்குகின்றன.
இந்த நிலையில், மருத்துக் கல்வி இயக்ககம், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் அணியக்கூடாது; சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகளையே அணிய வேண்டும். மாணவர்களும் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து, டிப் டாப் ஆக வர வேண்டும்.
கல்லூரிகளில், ராகிங் கூடாது. மூத்த மாணவர்களும், புதிய மாணவர்களும் இணக்கமான சூழலில் கல்வி பயில வேண்டும். அதற்கேற்ப, ராகிங் தடுப்பு குழு, கண்காணிப்பு குழு, மாணவர் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
