UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 11:33 AM
இணைய சேவைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகள், தொழில்நுட்பங்கள், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அனுகூலமற்ற காலகட்டத்தில் பல்வேறு இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டன. குறுகிய காலத்தில் இம்முயற்சிகள் தோல்வியை சந்தித்ததே, பின்னடைவுக்கு காரணம்.
பிறகு சீரான வளர்ச்சி பாதையில் செல்லத் துவங்கிய இத்துறை சர்வதேச பொருளாதார தேக்கத்தால், மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்தது.
புரட்சியின் எச்சங்கள்
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் இந்திய ஐ.டி. துறையில் ஏற்பட்ட புரட்சியின் மிச்சங்கள் கூட கிட்டவில்லை. மதுரையில் 2002ல் ஹனிவெல் நிறுவனம், தியாகராஜர் பொறியியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் இன்று வளர்ச்சி பெற்று 500 ஊழியர்களுடன் இயங்குகிறது. இதுதவிர சொல்லிக் கொள்ளும்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரிய ஐ.டி. நிறுவனங்கள் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் இல்லை.
ஆனால் சில ஆண்டுகளாக உள்ளூர் இளைஞர்களால் நூற்றுக்கணக்கான சிறு ஐ.டி. நிறுவனங்கள் துவக்கப்பட்டது ஆறுதலான விஷயம். சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவிலில் நூற்றுக்கணக்கான சிறிய ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன.
புரிதல் இல்லை
தமிழகத்தின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி 2009-10 ஆண்டில் ரூ.37 ஆயிரம் கோடி. சென்னை தவிர்த்து பிற நகரங்களின் பங்கு ரூ.900 கோடி. மதுரையின் பங்கு ரூ.28 கோடி மட்டுமே. மதுரையில் ஹனிவெல் நிறுவனம் தவிர வேறு எந்த மென்பொருள் சேவை நிறுவனமும் இல்லை என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது.
இங்கு செயல்படும் ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய முழுமையான புரிதல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்களுக்கு இல்லை. ஐ.டி. துறை வேலைவாய்ப்புக்கு சென்னை, பெங்களூரு செல்கின்றனர்.
சத்தமின்றி சாதிக்கும் மதுரை
மதுரை உட்பட தென் மாவட்டங்களில் தரமான சேவையளிக்கும் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளூர் தொழில் முனைவோரால் நடத்தப்படுகின்றன. பல நிறுவனங்கள் நூறு சதவீதம் ஏற்றுமதி செய்பவை. ஜனாதிபதி மாளிகை, இந்தியன் ரயில்வே, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் போன்ற உயரிய நிறுவனங்களுக்கான சேவைகளை மதுரை ஐ.டி. நிறுவனங்கள் வழங்குகின்றன.
மொபைல் போன்களுக்கான மென்பொருள் நிரல்களை உருவாக்குவதில் நாட்டில் முதன்மையான நிறுவனம் மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ளது.
பன்னாட்டு சேவை
மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமின்றி பல புகழ் பெற்ற கோயில்களுக்கான மென்பொருள் சேவை மதுரையிலிருந்து தான் அளிக்கப்படுகின்றன. ஓப்பன் சோர்ஸ் என சொல்லப்படும் கட்டற்ற மென்பொருள் பயிற்சி மற்றும் உற்பத்தியில் தென்னிந்தியாவின் முதன்மை நிறுவனம் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
தேசிய பங்குச் சந்தை, வெளிநாட்டு பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை தொடர்பான மென்பொருள் சேவையை மதுரையில் வளர்ந்து வரும் ஐ.டி. நிறுவனம் ஒன்று அளிக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில அரசு உட்பட பல நாட்டு அரசுகளின் மென்பொருள் மற்றும் இணைய சேவைகளை செய்யும் நிறுவனங்கள் மதுரையில் இயங்குகின்றன.
வளர்ச்சிக்கான தடைகள்
இத்தகைய நுட்பமான சேவைகளை வழங்கும் ஐ.டி. நிறுவனங்கள் இருந்தும் ஐ.டி. துறை வளர்ச்சி பெறாததற்கு பல காரணங்கள் உள்ளன. தனித்தன்மை வாய்ந்த சேவை அளிக்க கூடிய நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. மற்ற பல நிறுவனங்கள் இணையதள வடிவமைப்பு சேவைகளை மட்டுமே முக்கிய பணியாக கொண்டுள்ளன.
இத்தகைய சிறு நிறுவனங்களுக்கு இந்த பகுதிக்கே உரிய சில விஷயங்கள் வளர்ச்சி தடைகளாக உள்ளன. தொழில் வளர்ச்சி இல்லாததால், உள்ளூர் சந்தை வாய்ப்புகளை மட்டும் நம்பி ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகளை கொண்டுள்ள பெரிய ஐ.டி. நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க ஆர்வம் காட்டுவதில்லை.
மதுரை வன்முறை நகரமா?
ஐ.டி. துறை புரட்சியின் ஆரம்ப கால கட்டடங்களில் பன்னாட்டு மற்றும் இந்திய பெரிய நிறுவனங்களின் முதலீடுகளை பெற மதுரைக்காரர்கள் ஆர்வம் காட்டவில்லை. சென்னை, கோவை போல தொழில் முனைவோர் தானாகவே கவரப்படுவதற்கான அம்சங்கள் (சாலை கட்டமைப்பு, குடிநீர்) மதுரை உட்பட தென் மாவட்டங்களில் இல்லை.
உள்ளூர் தொழில் முனைவோர்களும் சாதகமற்ற சூழ்நிலைகளால், சென்னை, பெங்களூரு சென்று விட்டனர். மதுரையை வன்முறை நகரமாக சினிமாக்கள் சித்தரிப்பதும் ஒரு காரணம்.
மனித வளம் எப்படி?
சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் பணிபுரியும் ஐ.டி. திறனாளிகளில் 25 சதவீதம் பேர் தென் தமிழகத்தவர். அந்தளவு ஐ.டி. துறையில் மனிதவளத்தை தரும் தளமாக தென் தமிழகம் விளங்குகிறது. தென் மாவட்டங்களில் ஐ.டி. துறை வளர்ச்சிக்காக இந்திய தொழிற்கூட்டமைப்பு, மடீட்சியா மற்றும் தொழில், வியாபாரிகள் சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
மென்பொருள் நிறுவனங்களின் முன்னேற்ற சங்கம் (சிடா) துவங்கப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. முதலீடு, ஏற்றுமதி வாய்ப்பு, சந்தை போன்றவை குறித்து ஆலோசனைகளை வழங்குகிறது.
புதிய கொள்கைகள் தேவை
மத்திய, மாநில அரசுகளின் ஐ.டி. கொள்கைகள் பன்னாட்டு, பெரிய நிறுவனங்களை மனதில் வைத்து தீட்டப்பட்டன. இன்றைய நிலையை கருத்தில் கொண்டால், மதுரை உட்பட தென் மாவட்டங்களில் ஐ.டி. தொழில் வளர்ச்சி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை சார்ந்து இருக்கிறது. சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய ஐ.டி. கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.
அரசுகள் முன்வருமா?
வரும் காலங்களில் இந்திய சந்தையை குறி வைத்தும் இயங்கும் சிறு நிறுவனங்கள், குறைந்தளவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், குறைந்த முதலீட்டில் தனித்தன்மை வாய்ந்த மென்பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
சிறு நிறுவனங்களின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் திட்டங்களை தீட்ட வேண்டும். பின் தங்கிய மாவட்டங்களில் கிளஸ்டர் என்ற தொழில் கூட்டு அமைப்புகளை நிறுவ சிறு ஐ.டி. நிறுவனங்களின் முயற்சிக்கு சலுகை, முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசு அமைப்புகளின் மென்பொருள் தேவைகளுக்கு பிராந்திய நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். மதுரையில் சமீபத்தில் துவக்கப்பட்ட நேட்டீவ் லீடு பவுண்டேஷன் நவீன தொழில் முனைவுக்கு வேண்டிய அனைத்து சேவைகளையும் வழங்குகிறது.
சாப், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நேட்டீவ் லீடு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மதுரை போன்ற நகரங்களில் புதிய தொழில் புரட்சிக்கு வித்திட துவங்கி உள்ளன.
- ஆர்.சிவராஜா .தகவல் தொழில்நுட்ப வல்லுனர், மதுரை.
