UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 02:58 PM
திருச்சி: தமிழகத்தில் அமைந்துள்ள மிக முக்கிய பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில், திருச்சியில் அமைந்த என்.ஐ.டி., முக்கிய இடம் பெறுகிறது. இந்தக் கல்வி நிறுவனம் துவங்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகிறது. இதுவொரு அரசு கல்வி நிறுவனம்.
கடந்த 1964ம் ஆண்டு, அப்போதைய தமிழக தொழில்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், திருச்சியில், இக்கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பத்தில், வெறும் 3 பாடப் பிரிவுகளுடன், 120 மாணவர்களை மட்டுமே கொண்டு துவக்கப்பட்ட இந்த NIT, இன்று 6,000 மாணவர்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது.
10 இளநிலைப் பட்டப் படிப்புகள், 23 முதுநிலை பட்டப் படிப்புகள் தற்போது உள்ளன. மேலும், பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 200 ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சிகளை தற்போது இங்கே மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கல்வி நிறுவனம் முன்பு, REC - Regional Engineering College என்று அழைக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர்வது, பல மாணவர்களின் கனவாக உள்ளது. முன்பு, இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கு மட்டும் பெயர்பெற்ற இக்கல்வி நிறுவனம், இன்று முதுநிலைப் படிப்புகளுக்கும் பெயர் பெற்றுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற மண்டல பொறியியல் கல்லூரி(REC), அதன்பிறகு, NIT - National Institute of Technology என பெயர் மாற்றம் பெற்று, தற்போது அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.
