UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM
ADDED : ஜூலை 20, 2014 12:30 PM
சென்னை: அண்ணா நகரை சேர்ந்தவர் மெட்வின் தேவா, 8. அண்ணா நகர் சி.எஸ்.ஐ. எட்வர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். அவ, 9 அங்குல உயரத்திலிருந்து 40 மீ. தூரத்தை கடந்து லிம்போ உருளை சறுக்கில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தந்தை ராஜு, விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். தாய் ஜாஸ்மின்; இல்லத்தரசி.
கின்னஸ் சாதனை குறித்து தேவா கூறியதாவது: நான் மூன்று வயது முதல் உருளை சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 2011ம் ஆண்டில் சென்னை மாவட்ட அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளேன். உருளை சறுக்கில் சாதிக்க வேண்டும் என நினைத்தேன்.
கடந்த பிப்ரவரியில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தரையில் இருந்து 9 அங்குல உயரத்தில் 40 மீ. தூரத்தை உருளை சறுக்கு மூலம் கடந்தேன். இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தி ஆசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம் பிடித்தேன். இதை தமிழக, இந்திய, ஆசிய சாதனையாளர் அமைப்புகளின் நடுவர்கள் முன்னிலையில் நிகழ்த்தி காண்பித்தேன்.
கர்நாடகத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் தரையில் இருந்து 10 அங்குல உயரத்தில் 10 மீ. தூரத்தை கடந்து சாதனை படைத்து இருந்தான். அதை நான் தற்போது முறியடித்து உள்ளேன். மேலும் நான் ஏற்கனவே 9 அங்குல உயரத்தில் இருந்து 25மீ. தூரத்தை லிம்போ உருளை சறுக்கு மூலம் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளேன். அதற்கான சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேவா கூறினார்.
