UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 01:53 PM
திண்டுக்கல்: பல்கலைக்கான "பிளாக்" மானியத்தை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பல்கலை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடாசலம் மூலமாக மனு அளித்தனர்.
மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: தமிழகத்திலுள்ள பல்கலைகளில் 1996ல் பணிபுரிந்த பணியாளர்கள் அடிப்படையில் தமிழக அரசு "பிளாக்" மானியம் வழங்கி வருகிறது. பல்கலையில் 1996க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு சொந்த நிதியில் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இதனால், பல்கலைக்கழகங்கள் நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன.
"பிளாக்" மானியத்தை அதிகரித்து, 2013 வரை நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் நிர்வாக அமைப்புகளில் ஆசிரியரல்லாத ஊழியர் ஒருவர் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். பல்கலையில் பணிபுரியும் ஊழியர்களில் சில பிரிவினருக்கு ஓய்வுபெறும் வயதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அனைவருக்கும் ஓய்வுபெறும் வயதை 60 ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம் என்றார்.
