UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 11:33 AM
காஞ்சிபுரம்: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுப்பதற்கு பல்வேறு கட்டணங்கள் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நலம், சமூக நலத்துறை, அரசு உதவி பெறும் பள்ளி என 154 உயர்நிலைப் பள்ளிகளும், 161 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் அரசுப் பள்ளி நிர்வாகங்கள் பல விதமான கட்டணங்களில் முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புதுவிதமான கட்டணங்களை மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யும் பள்ளி நிர்வாகங்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது ஒவ்வொரு மாணவரிடமும் 100 முதல் 150 ரூபாய் வரை எந்த வித ரசீதும் இல்லாமலும் பல பள்ளிகள் வசூல் செய்தன. இதையும் மாவட்ட கல்வி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த மாதம் நடந்தது. இதற்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர் மூலம் ஒவ்வொரு பள்ளி மாணவர்களையும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்திற்காக ஒவ்வொரு மாணவரிடமும் 25 ரூபாய் மட்டும் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் அரசு பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களிடமும் 35 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதைகேட்கும் பெற்றோரிடம் கொடிநாள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்திற்கான கட்டணம் என புதுவித கட்டணங்களை கணக்கு காட்டுகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், &'&'மாவட்ட கல்வி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் மாணவர்கள் செலுத்தினால் போதுமானது. ஆனால், அதைவிட கூடுதலாக கேட்கும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
