பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ் 2 மாணவர் பலி
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ் 2 மாணவர் பலி
UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM
ADDED : ஜூலை 24, 2014 12:04 PM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ் 2 மாணவர் தவறி விழுந்து பலியானார். டிரைவர் மீது நடவடிக்கை கோரி பள்ளி மாணவர்கள் முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் மகன் முத்துராம்குமார், 17, இவர் காராப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளிக்கு தினமும் பஸ்சில் சென்று வந்தார். நேற்று காலை 7.50 மணிக்கு பள்ளிக்கு அரசு பஸ்சில் முன் படிக்கட்டு பகுதியில் தொங்கி கொண்டு பயணித்துள்ளார்.
பஸ் தோப்பு தெரு பகுதிக்கு வந்தபோது தவறி விழுந்தார். இதில் பின் சக்கரம் மாணவர் மீது ஏறியதில் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாமதம் ஏற்பட்டதால் தனியார் வாகனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்.
சம்பவம் அறிந்த மாணவர்கள் முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் அரிகரன் மாணவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அரசு பஸ் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த தனராஜை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தொடரும் படிக்கட்டு பயணம்
தமிழகத்தில் பள்ளி நேரத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாத நிலையில், மாணவர்கள் வேறு வழியின்றி நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல இது போன்று படிக்கட்டு பயணத்தை மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் பள்ளிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முன் வர வேண்டும்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் பஸ்சில் மாணவர்கள் நெருக்கடியில் பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் மெத்தன போக்கும், போலீசாரின் முறையான கண்காணிப்பும் இல்லாததால் தான் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் தொடர்கிறது. உயிரிழப்பும் தொடர்கிறது. சம்பவம் நடந்தவுடன் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். அதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை.
