உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்
உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM
ADDED : ஜூலை 28, 2014 11:11 AM
ஊட்டி: "வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 150, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி, அதற்கு சமமானவற்றுக்கு மாதம் 200, பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் 300 ரூபாய் வழங்கப்படும். இதற்கு தகுதியுடைவர்கள், கடந்த ஜூன் 30ம் தேதியின்படி, வேலைவாய்ப்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு பதிவு தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிலையத்திலும் முழுநேர மாணவராக இருக்க கூடாது மற்றும் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே மூன்றாண்டுகள் பயனடைந்த பயனாளியாகவும் இருக்க கூடாது.
விண்ணப்பதாரர் அரசு மற்றும் தனியார் துறையிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி கல்வியை தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள பதிவுதாரர்கள், இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகலாம். இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறியுள்ளார்.
