அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை சீல் வைக்க அறிவுறுத்தல்
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை சீல் வைக்க அறிவுறுத்தல்
UPDATED : ஆக 05, 2014 12:00 AM
ADDED : ஆக 05, 2014 02:27 PM
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை சீல் வைத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக நகர ஊரமைப்பு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 53 ஆயிரத்து 722 பள்ளிகள், 1628 கல்லுாரிகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவற்றில், தனியாரால் நடத்தப்படும் 19 ஆயிரத்து 190 பள்ளிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு, நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சில கல்வி நிறுவனங்களில், விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மிகச் சில கல்வி நிறுவன நிர்வாகங்கள் மட்டுமே, முறைப்படி அனுமதி பெற்று கட்டடங்களைக் கட்டியுள்ளன.
அனுமதி பெறாத, விதிமீறல் கட்டடங்களால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணமும் செலுத்தப்படாததால், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இருப்பினும், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று கருதி, அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
சமீபத்தில், சட்டசபையில் இதுபற்றி விவாதம் எழுந்தபின், கல்வி நிறுவன கட்டடங்களின் மீது, நகர ஊரமைப்புத்துறையின் பார்வை திரும்பியுள்ளது. மாநிலம் முழுவதும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை மூடி, சீல் வைக்குமாறு, நகர ஊரமைப்புத்துறை மற்றும் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்களுக்கு நகர ஊரமைப்பு கமிஷனர் வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல், கல்வியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லுாரிகள், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பட்டியலை எடுத்து, அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்து, அனுமதியின்றி அவை கட்டப்பட்டிருந்தால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய நிறுவனங்களுக்கு, துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தாலும், நகர ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ஆகிய பிரிவுகளின் கீழ், அந்த கட்டடங்களை மூடி, சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது. எனவே, இதுவரை நோட்டீஸ் தராத அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். ஏற்கனவே நோட்டீஸ் தரப்பட்டு, போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தால், அந்த கட்டடங்களை மூடி, சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களின் மீது, உரிய நடவடிக்கையை, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்க வேண்டும். இதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டால், களப்பணி செய்ய வேண்டிய அலுவலர்களே, அதற்கு முழு பொறுப்பாவர். அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு, இந்த நடவடிக்கைகளை மென்மையாகவும், அதேநேரத்தில் வெற்றிகரமாகவும் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை அனுப்பவும். இவ்வாறு அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தமிழகம் முழுவதும் தனியார் கல்வி நிறுவன கட்டடங்களில், நோட்டீஸ் விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட கட்டடங்களை, நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள் எவ்வாறு மூடி சீல் வைப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
