போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவர்கள்
போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவர்கள்
UPDATED : ஆக 07, 2014 12:00 AM
ADDED : ஆக 07, 2014 12:50 PM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரம் கிராமத்திற்கு, காலை நேரத்தில், போதிய டவுன் பஸ் வசதி இல்லாததால், திருப்புத்தூருக்கு, மேற்படிப்பிற்கு செல்லும் மாணவ, மாணவியர் படிக்கட்டில் அபாயகரமாக பயணம் செய்கின்றனர்.
திருப்புத்தூரிலிருந்து, 6 கி.மீ.,தொலைவில் உள்ளது நெடுமரம். இங்கு நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு திருப்புத்தூர் சென்று படிக்கின்றனர். இக்கிராமத்திற்கு காலை 6.45 மணிக்குப் பின், காலை 8.45 மணிக்கு மட்டுமே டவுன் பஸ் வசதி உள்ளது.
பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள், டவுன் பஸ்சில்தான் செல்ல முடியும் என்பதால், இப்பகுதி மாணவர்கள், காலை 8.45 மணிக்கு திருமயத்திலிருந்து - திருப்புத்தூர் செல்லும் இந்த ஒரு பஸ்சை மட்டுமே நம்பியுள்ளனர்.
இப்பஸ்சில், பயணிகள் நிறைந்து வருவதால், நெருக்கடியை குறைக்க, கிராமத்தினர் காலை நேர பஸ்சில் மாணவர்களுக்காக, தங்கள் பயணத்தையும் தவிர்த்து விடுகின்றனர். இருப்பினும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்பதால், பயணிகள் நிறைந்து வரும் இப்பஸ்சில், மீதமுள்ள இடங்களில் நின்றும், படியில் ஒரு காலை வைத்தும், தொங்கிக் கொண்டு கல்வி கற்கச் செல்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழகத்திடம் கிராமத்தினர் பல முறை மனுக்கொடுத்தும் பலனில்லை. மதுரை-தஞ்சாவூர் வழித் தடத்தில் உள்ள இக்கிராமத்திற்கு, பஸ்கள் தொடர்ந்து செல்லும் ரோட்டில் இருந்தும், இக்கிராமத்தினருக்கு, போக்குவரத்து வசதி மறுக்கப்பட்டுள்ளது.
கிராமத்தினர் கூறுகையில், "பஸ் பாஸ் உள்ளதால், காலை நேரத்தில் கூடுதலாக, ஒரு டவுன் பஸ் விட வேண்டும். தற்போது, ஊர்குளத்தான்பட்டி வந்து செல்லும், காலை 8.30 மணி டவுன் பஸ்சை, நெடுமரம் வழியாக திருப்புத்தூர் செல்ல அனுமதிக்கலாம். அதற்கான புதிய தார் ரோடு வசதியும் உள்ளது" என்கின்றனர்.
மேலும், "கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரியுள்ளோம். அதற்கான இடவசதி இருந்தும், தரம் உயர்த்தப்படவில்லை. பஸ் நெருக்கடியை சமாளிக்க இந்த வாய்ப்பையும், அரசு பயன்படுத்தி, எங்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.
