பள்ளி வளாக கட்டுமான பணியை நிறுத்த தொல்லியல் துறை உத்தரவு
பள்ளி வளாக கட்டுமான பணியை நிறுத்த தொல்லியல் துறை உத்தரவு
UPDATED : ஆக 07, 2014 12:00 AM
ADDED : ஆக 07, 2014 01:13 PM
மாமல்லபுரம்: விதிகளை புறக்கணித்து, அனுமதியின்றி கட்டப்படும் பள்ளி வளாக கட்டுமான பணியை நிறுத்த, தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு மற்றும் குடைவரை மண்டபங்கள் ஆகியவை, பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. அவை, இந்திய தொல்லியல் துறை பொறுப்பில் பராமரிக்கப்படுகின்றன. பாரம்பரிய பகுதி பாதுகாப்பு கருதி, அதன் வளாக எல்லையிலிருந்து, 100 மீ., தொலைவிற்குள், கட்டடம் கட்ட, தொல்லியல் துறை தடைவிதித்துள்ளது.
இத்தொலைவிற்கு அப்பாற்பட்ட பகுதியில், விதிமுறை களுக்குட்பட்டு கட்டடம் கட்டலாம். இந்நிலையில், விதிகளை மீறி, தனியாரை போன்றே, அரசு நிர்வாகமும் கட்டடம் கட்டுகிறது. அர்ச்சுனன் தபசு சிற்பம் அருகில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மூலம், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், கணினி அறை கட்டடம் கட்டி வருகிறது.
அங்கிருந்த பழைய ஓட்டுக்கூரை கட்டடத்தை முற்றிலும் இடித்து, முறையான அனுமதியின்றி, இந்த கட்டடம் கட்டப்படுகிறது. இதையடுத்து, கட்டுமான பணியை நிறுத்த, மாமல்லபுரம் தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
