புதிய அங்கன்வாடி கட்டடம் எப்போது? 6 மாதங்களாக கோவில் வளாகத்தில் அல்லல்படும் குழந்தைகள்
புதிய அங்கன்வாடி கட்டடம் எப்போது? 6 மாதங்களாக கோவில் வளாகத்தில் அல்லல்படும் குழந்தைகள்
UPDATED : ஆக 08, 2014 12:00 AM
ADDED : ஆக 08, 2014 12:32 PM
கொட்டிவாக்கம், இளங்கோ நகரில், அங்கன்வாடி மையம் இயங்கியது. அங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். மையத்தின் கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் தறுவாயில் இருந்ததால், ஆறு மாதங்களுக்கு முன் கட்டடம், முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
மெத்தனப்போக்கு...
அதையடுத்து, அதே தெருவில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில், அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. தினமும் காலை கோவில் பூஜை முடிந்தபின், குழந்தைகள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் திறந்தவெளி பகுதியில், சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து தரப்படுகின்றன. கோவில் தரையில் குழந்தைகள் படுக்க வைக்கப்படுகின்றனர். ஆறு மாதங்களாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல், குழந்தைகள், கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, சமூல நலம், மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட, கடந்த சில மாதங்களுக்கு முன், பெருங்குடி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக, கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
தரையில்தான்...
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது: கூலிவேலை பார்க்கும் எங்களை போன்றோர் பலரின் குழந்தைகள் மட்டுமே, அங்கன்வாடியில் படிக்கின்றனர். மையத்தில் உள்ளவர்கள் குழந்தைகளை மிகவும் பொறுப்பாக பார்த்துக் கொள்கின்றனர். அதில் பிரச்னை இல்லை. ஆனால், நிரந்தர கட்டடம் இல்லாததால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, கழிப்பறை இன்றி குழந்தைகள் படும்பாடுதான் பரிதாபம். கோவில் வளாகத்தில் பாய்கள் விரிக்க கூடாது. அதனால், தரையில்தான் படுக்க வைக்கின்றனர். விரைவில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தனர்.
