சிதிலமடைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பிக்க கோரிக்கை
சிதிலமடைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பிக்க கோரிக்கை
UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 03:40 PM
திருப்பூர்: திருப்பூரில் சிதிலமடைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2,400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக, ஆதிதிராவிட மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. கல்லூரி வளாகத்தில் எஸ்.சி., ஹாஸ்டலும், காலேஜ் ரோட்டில் பி.சி., ஹாஸ்டலும் அமைந்துள்ளன.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் செயல்படும் எஸ்.சி., ஹாஸ்டல், இரண்டு அடுக்கு கட்டடமாக உள்ளது; இதில், தரைதளம் மற்றும் முதல் தளம் பகுதியில் உள்ள தங்கும் அறைகள் முழுவதும் சிதிலமடைந்துள்ளன. மேற்கூரை காரை மற்றும் சுவர் பகுதி முழுவதும் பெயர்ந்து, விரிசலடைந்துள்ளது. ஜன்னல் பகுதி கம்பிகள் மற்றும் கதவுகள் உடைந்து காணப்படுகின்றன.
பல ஆண்டுகளாக, தரைதளம் மற்றும் முதல் தளம் பகுதியில் உள்ள அறைகளில் மாணவர்கள் தங்குவதில்லை; இரண்டாம் தளத்தில் உள்ள அறைகளையே, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது, இவ்விடுதியில் 78 மாணவர்கள் தங்கியுள்ளனர். தரைதளம் மற்றும் முதல் தளம் இருந்தும், மாணவர்கள் இரண்டாம் தளத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.
விடுதி பகுதியை சுற்றிலும், புதர்கள், செடிகளாக காணப்படுகின்றன. பகல், இரவு நேரங்களில் பாம்பு நடமாட்டமும் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். பழு தடைந்துள்ள விடுதி அறைகளை புதுப்பிக்கவும், விடுதி வளாகத்தை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
