துணை வார்டனை மாற்றக்கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்
துணை வார்டனை மாற்றக்கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்
UPDATED : ஆக 12, 2014 12:00 AM
ADDED : ஆக 12, 2014 12:33 PM
திருச்சி: பாரதிதாசன் பல்கலை விடுதியில், துணை வார்டனை மாற்றக்கோரி, பல்கலைக்கழக கேட்டை மூடி, முதுநிலை மாணவர்கள், முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில், தங்க காவேரி, பொன்னி என இரண்டு விடுதிகளில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, பல்கலையில் படிக்கின்றனர்.
இந்நிலையில், அருவெறுப்பான வார்த்தைகள் பேசும் விடுதி துணை வார்டனை மாற்ற வேண்டும் என்று முதுநிலை மாணவர்கள், பலமுறை பல்கலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், துணை வார்டன் மாற்றப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த முதுநிலை மாணவர்கள், நேற்று காலை உணவை சாப்பிடாமல் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்று, பல்கலையின் நுழைவு வாயில் கேட்டை மூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மற்ற துறைகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த பல்கலை துணைவேந்தர் முத்துக்குமார், முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முதுநிலை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
