UPDATED : ஆக 12, 2014 12:00 AM
ADDED : ஆக 12, 2014 01:08 PM
கும்மிடிப்பூண்டி: கண்லுார், பாலவாக்கம் கிராமங்களுக்கு பேருந்து வசதி கோரி, இரு கிராமவாசிகளும், பள்ளி மாணவர்களும், வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கவரைப்பேட்டை அருகே உள்ள ஐயர்கண்டிகை மற்றும் ஆரணி இடையே செல்லும் ஏழு கிலோ மீட்டர் சாலையில், கண்லுார் மற்றும் பாலவாக்கம் ஆகிய இரு கிராமங்கள் அமைந்துள்ளன. அந்த இரு கிராமங்களில் இருந்து, ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 80 மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர்.
இதுநாள் வரை, அந்த இரு கிராமத்திற்கும், அரசு சார்பில் பேருந்து வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், கோயம்பேடு சந்தைக்கு பூ மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லும் விவசாயிகளும், ஆரணி பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் தினசரி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அரசு பேருந்து இயக்க கோரி, பல ஆண்டு காலமாக அரசின் பல துறைகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த, அந்த இரு கிராமவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ஆண்டவன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கையை அரசு செயல்படுத்த தவறும் பட்சத்தில், பொன்னேரியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கை மீதான மனுவை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமியிடம் அளித்து சென்றனர்.
