புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு
புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 12:37 PM
புதுச்சேரி: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, சமூக நலத்துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை, பார்வையிழந்த, காது கேளாத, எலும்பு ரீதியாக ஊனமுற்ற, சிறிதளவு மனநலன் பாதித்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பில் ஆரம்பித்து, முதுகலை பட்டப் படிப்பு வரை, கல்வி உதவித்தொகை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. எனவே, தற்போதைய விலைவாசி நிலவரங்களை கவனத்தில் கொண்டு, கல்வி உதவித் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பில் இருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 250 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை, தற்போது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பில் இருந்து, எட்டாம் வகுப்பு வரை, ரூ.1,000லிருந்து, 2,000 ரூபாயாகவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து, 12ம் வகுப்பு வரையும், ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்பு படிப்பவர் களுக்கும் 850 லிருந்து, 3,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ரூ.1,250 ரூபாயிலிருந்து, ரூ.5,000 ரூபாயாக, ஆண்டுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பொறியியல் உள்ளிட்ட இளநிலை தொழில்நுட்ப படிப்பு படிப்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுக்கும் கல்வி உதவித்தொகை, ரூ.6,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுகலை பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு, ரூ.1,700 லிருந்து, ரூ.6,800 ரூபாயாக கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விடுதி கட்டணம், பார்வையற்றவர்களுக்கு உதவியாளருக்கான படி, எலும்புரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போக்குவரத்துப் படி ஆகியவையும் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, புதிய அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு, கடந்த 2013-14ம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
