இந்திய வேளாண் ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு 37% : வேளாண் பல்கலை துணைவேந்தர்
இந்திய வேளாண் ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு 37% : வேளாண் பல்கலை துணைவேந்தர்
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 01:01 PM
மதுரை: இந்திய வேளாண் ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு, அதிகபட்சமாக 37 சதவீதம் உள்ளது என கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.
மதுரை விவசாயக் கல்லுாரியில் ஆக.,19ல் பொன்விழா ஆண்டு துவக்கவிழா நடக்கிறது. இதற்கான நிருபர்கள் சந்திப்பில் துணைவேந்தர் பேசியதாவது: கோவைக்கு அடுத்து மதுரையில் விவசாயக்கல்லுாரி அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளாகிறது. பொன்விழா ஆண்டையொட்டி ஆக., 2015 வரை, 12 துறைகள் சார்பில் மாதந்தோறும் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.2 கோடி மதிப்பில் மகளிர் விடுதி, ரூ.3.5 கோடி மதிப்பில் உணவகம், மாணவர்களுக்கான தேவைகளை ஈடுசெய்யும் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசின் ரூ.15 கோடி மதிப்பீட்டில், உயிர் மரபியல் ஆய்வுக்கூடம் அமைப்பட உள்ளது. ரூ.ஒருகோடியில் பாரம்பரிய வேளாண் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
மத்திய அரசின் ரூ.8 கோடி நிதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மகத்துவ மையமாக இது அமையும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, குறுந்தானிய உற்பத்தியில், விருப்பமுள்ளவர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் பி.எச்டி., ஆய்வுக்குப் பின், அதே ஆய்வை மீண்டும் விரிவுபடுத்துவதற்கு, உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. தற்போது அதே ஆராய்ச்சியை தொடர்ந்து இரண்டாண்டுகள் தொடர்வதற்கு உதவித்தொகையுடன் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்கு, அதிகபட்சமாக 37 சதவீதம் உள்ளது என்றார். டீன்கள் சின்னுசாமி, புஷ்பா, பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் (பொறுப்பு) மகேஸ்வரன், உழவியல் துறைத் தலைவர் பாலசுப்ரமணியன், தொலைநிலை கல்வி இயக்குனர் சாந்தி உடனிருந்தனர்.
