தீவிர போராட்டத்தில் டி.டி. கல்லூரி மாணவர்கள் - கையைப் பிசையும் அரசு
தீவிர போராட்டத்தில் டி.டி. கல்லூரி மாணவர்கள் - கையைப் பிசையும் அரசு
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 10:39 AM
சென்னை: மருத்துவக் கல்வியைத் தொடர எந்த வகையிலாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்போடு டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கல்லூரியை அரசே ஏற்று நடத்தினாலும், சிக்கல் தீராது என்பதால், அரசு மவுனமாக இருப்பது தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் டி.டி. மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. 2010 11ல் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளித்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ. அனுமதி மறுத்து விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கை நடத்தியது. விவரம் தெரியாமல் பணத்தைக் கொட்டிக் கொடுத்து மாணவர்கள் சேர்ந்தனர். பல்வேறு சிக்கல்களில் கடந்த ஆண்டில் கல்லூரி இழுத்து மூடப்பட்டது.
எதிர்காலம் கேள்விக்குறி: இதில் அனுமதியின்றி இரண்டு ஆண்டுகளில் சேர்த்த 216 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. மருத்துவக்கல்வியைத் தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும்; டி.டி. கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பாதிக்கப்பட மாணவ மாணவியர் போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் என நடத்த வந்த மாணவர்கள், திடீரென போராட்டத்தின் போக்கை மாற்றியுள்ளனர். தீக்குளிக்க முயற்சி, கட்டடங்களில் இருந்து கீழே குதிக்க முயற்சி, கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி என போராட்டத்தை வேறு விதமாக மாற்றியுள்ளனர். திக்கு தெரியாமல் நிற்கிறோம்; எங்களுக்கு வேறு வழியே தெரியாமல்தான் இப்படி ஒரு போராட்டத்தை நடத்துகிறோம் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகின்றனர். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதே கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி.டி. மருத்துவக் கல்லூரி மூடப்பட்டபோது, எம்.சி.ஐ. அனுமதியுடன் படித்த மாணவர்களின் கல்வி தொடர அரசு நடவடிக்கை எடுத்தது. அனுமதியின்றி இரண்டு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அதற்கான எல்லாவற்றையும் செய்யுங்கள் என முதல்வர் அறிவுறுத்தினார்.
எம்.சி.ஐ. அனுமதியின்றி, எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களை சேர்க்க முடியாது. இதனால் மருத்துவம் சார்ந்த வேறு பட்ட படிப்புகளில் இடம் தர முடிவு செய்தோம்; மாணவர்கள் அதை ஏற்கவில்லை. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க அனுமதி கேட்டு எம்.சி.ஐ.க்கு கோரிக்கை வைத்தோம்; ஆனால் அதை ஏற்க எம்.சி.ஐ. மறுத்து விட்டது. மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர். இவர்களின் கோரிக்கையை நீதிமன்றங்களும் நிராகரித்து விட்டன. இதுபற்றி எல்லா விவரங்களும் தெரிந்தும், மாணவர்கள் போராட்ட நிலை எடுத்துள்ளது கவலை அளிக்கிறது.
எம்.சி.ஐ. அனுமதி தராது: கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கின்றனர். மாநில அரசு அப்படி ஒரு நிலை எடுத்தாலும் இந்த மாணவர்களைச் சேர்க்க எம்.சி.ஐ. அனுமதி தராது. அப்படி ஒரு சூழலில் தமிழக அரசு வேறு என்னதான் செய்ய முடியும்? மாணவர் விரும்பினால் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்த்துக் கொள்ள அரசு தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
