UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:19 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் நடைபெறும் ஓராசிரியர் பள்ளிகளுக்கான, உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சோலார் விளக்கு: ஸ்ரீபெரும்புதுார், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஓராசிரியர் பள்ளிகளின் செயலர், கிருஷ்ணமாச்சாரி தலைமை தாங்கினார். முன்னாள் காவல் துறை தலைவரும், ஓராசிரியர் பள்ளிகளின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான நடராஜ், ஓராசிரியர் பள்ளிகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கிரிஜா சேஷாத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விஸ்வ இந்து வித்யகேந்திரா தலைவர் வேதாந்தம் ஜீ, தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பொது மேலாளர் ரமணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 100 ஓராசிரியர் பள்ளிகளுக்கான, சோலார் மின் விளக்குகளை வழங்கினர்.
விழாவில், ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், 75 ஓராசிரியர் பள்ளிகளுடன் துவங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 480 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இதன் மூலம், 20 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர்.
நன்னெறி: கல்வியுடன், ஒழுக்கம், நன்னெறி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளிகள், மாணவர்கள் இருக்கும் இடம் தேடி, சென்று, கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில், 150 ஓராசிரியர் பள்ளிகளுக்கு, தனியார் கட்டுமான நிறுவனம், 36 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. அந்நிறுவனம், கிராமப்புற மாணவர்களுக்கு கட்டுமான இலவச பயிற்சி உடன் வேலைவாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிராமப்புற இளைஞர்கள் முன்னேற வேண்டும். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
