அயர்லாந்து டூப்ளின் பல்கலையில் ஆராய்ச்சி - காந்திகிராம பல்கலை மாணவி தேர்வு
அயர்லாந்து டூப்ளின் பல்கலையில் ஆராய்ச்சி - காந்திகிராம பல்கலை மாணவி தேர்வு
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:53 PM
திண்டுக்கல்: அயர்லாந்து டூப்ளின் பல்கலையில் அரவாணிகள் சமூக ஒதுக்கல் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள, காந்திகிராம பல்கலை மாணவி டீனாஜோசப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் எமின்ட் திட்டத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள, இந்தியா முழுவதும் 2,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 9 பல்கலையை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காந்திகிராம பல்கலை சமூக ஒதுக்கல் மற்றும் இணைப்புக் கொள்கை மைய மாணவி டீனாஜோசப் அயர்லாந்து டூப்ளின் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு ஆங்கில மொழித்திறன் (IELTS) தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு அரவாணிகளின் சமூக ஒதுக்கல் குறித்து ஒன்பது மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளார்.
சமூக ஒதுக்கல் மற்றும் இணைப்பு கொள்கை மைய பேராசியர் மணி கூறுகையில், "ஆராய்ச்சி படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள டீனாஜோசப் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்தவர். அவருக்கான பயணச் செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஐரோப்பிய ஆணையம் வழங்குகிறது. கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1.4 லட்சம் வழங்கப்படும். இறுதியாக காந்திகிராம பல்கலை மூலம் பட்டம் வழங்கப்படும்,” என்றார்.
