அறிவியல் கண்காட்சியில் திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி முதலிடம்
அறிவியல் கண்காட்சியில் திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி முதலிடம்
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:59 AM
திருக்கழுக்குன்றம்: பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில், திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி முதலிடம் பெற்றது.
பள்ளிக் கல்வித் துறையால் மாணவர்கள் மத்தியில் அறிவுத்திறனை மேம்படுத்தி, சிறு வயதிலேயே மாணவர்களின் அறிவியல் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி, சமுதாயத்திற்காக புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, செங்கல்பட்டு கல்வி மாவட்ட அளவில், தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி யில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் காட்சி படைப்புகளை, ஐந்து தலைப்புகளின் கீழ் இடம்பெற செய்தனர். இதில், திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் லட்சுமிபதி, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வடக்கு ராஜ கோபுரம் - அதன் அருகே உள்ள நந்தி தீர்த்தம் ஆகிய இரண்டினையும் முப்பரிமாண கண்காட்சி வடிவமாக அமைத்து, அறிவியல் கண்காட்சியில் இடம் பெறச் செய்து, அறிவியல் ரீதியான செயல்களை விளக்கினார்.
இந்த படைப்பு, அறிவியல் மற்றும் கணித அடையாளங்கள் என்ற தலைப்பில், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. இந்த மாணவருக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தி வாழ்த்து தெரிவித்தார்.
