UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 11:04 AM
திருத்தணி: ஊராட்சி தொடக்கப் பள்ளி சுற்றியும், முழுமையாக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என அப்பகுதிவாசிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி, பி.என்.கண்டிகை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் முழுவதும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள், ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விவரம்: பள்ளிக்கு, ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திலேயே விளையாட்டு மைதானமும் அடங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்ப உத்தரவு பெற்று பணிகள் நடந்து வருகின்றன. சிலரின் துாண்டுதலால், பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் எழுப்பாமல் பாதியளவுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
மேலும், அரசு நிலத்தை தனியார்களுக்கு வழிவிட்டு அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாதிஅளவு சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு, ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
