மருத்துவக் கல்லூரி விடுதி - சமையல்காரர் நியமனம் எப்போது?
மருத்துவக் கல்லூரி விடுதி - சமையல்காரர் நியமனம் எப்போது?
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 11:24 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட டாக்டர்களும் வளாக விடுதியில் தங்கி பணி செய்கின்றனர். இவர்களுக்கு உணவு தயாரித்து வழங்க ஒப்பந்த அடிப்படையில் ஒருவரை ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் நியமித்தது.
இவர், தரமான உணவை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சமையலரிடம் புகார் செய்தும் கேட்காததால் ஆக. 23ல் விடுதி மாணவர்கள் டீன் கார்த்திகேயனிடம் புகார் செய்தனர். சமையல் ஒப்பந்த டெண்டரை ரத்து செய்ய வார்ட னுக்கு டீன் உத்தரவிட்டார். மாணவர் மன்றம் சார்பில், மெஸ் நடத்துவது, மாதந்தோறும் உரிய செலவை பகிர்ந்துகொள்வது என விடுதி மாணவர்கள், டாக்டர்கள் முடிவெடுத்தனர்.
ஆக.,23 முதல் விடுதி மாணவர்கள், டாக்டர்கள் வெளியிலுள்ள ஓட்டல்களில் உணவை வாங்கிச் சாப்பிடுகின்றனர். அருகில் ஓட்டல் எதுவுமின்றி மதுரை முக்கு, பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இரவில் மாணவிகள் வெளியே வர முடியாத நிலையில், அவர்களுக்கு மாணவர் மன்றத்தினர் சாப்பாடு வாங்கி தருகின்றனர்.
மாணவர் மன்ற நிர்வாகி செல்வன் கூறுகையில், "மாணவர் மன்ற நிதி ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ளது. இதிலிருந்து முதல் கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி, தேவையான உதவிகளை செய்து தருவதாக டீன் உறுதியளித்துள்ளார். நல்ல சமையலர்களை நியமிக்க முயற்சித்து வருகிறோம். செப்., முதல் மாணவர் மன்றம் சார்பில், மெஸ் செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
