கிராமப்புற நூலகங்கள் செயல்படுவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?
கிராமப்புற நூலகங்கள் செயல்படுவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 11:56 AM
நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள், செயல்படாமல் மூடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன.
இதனால், இவற்றிக்காக செலவழிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகிறது. கிராமப்புற மக்கள் அறிவை மேம்படுத்த இவற்றை செயல்பட வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் நரிக்குடி ஒன்றியத்தில் சாலை இலுப்பைகுளம், அழகாபுரி, மேலப்பருத்தியூர், அன்னலட்சுமிபுரம், வேலானேரி, இருஞ்சிறை, டி.கடம்பங்குளம், வீரசோழன், வரிசையூர், புல்வாய்க்கரை , எழுவனி உள்ளிட்ட, 44 ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொது நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இவை சில ஊராட்சிகளில் மூடப்பட்டு வெறும் காட்சிப் பொருளாகவே மாறியுள்ளன.
மேலும் சில ஊராட்சி நூலகங்களில் இதுவரை முழுமையான புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு குறைவாகவே திறந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது.
நடவடிக்கை வேண்டும்: நரிக்குடி ஒன்றியத்தில் மட்டுமல்லாது, மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிராமங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கிராமப்புற மாணவர்களின் அறிவை வளர்க்கும் பொருட்டும், பொழுதுபோக்கிற்காகவும் நூலகங்கள் கட்டப்பட்டன. இவை வேறு பயன்பாட்டிற்குத்தான் உதவுகின்றன.
உதாரணமாக, சில கிராமங்களில் ஊராட்சி அலுவலகமாகவும், சில கிராமங்களில் கூட்டம் நடத்தும் அறையாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நூலகத்திற்கு ஊராட்சியிலிருந்து நூலகர் நியமித்துக் கொள்ளலாம். அப்படி இருந்தும் பெரும்பான்மையான ஊராட்சிகளில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த நூலகங்கள் நாளடைவில் இடிந்து எந்தவித பயன்பாட்டிற்கும் இல்லாமல் வீணாகப் போவதற்கு முன் செயல்படச் செய்ய வேண்டும்.
புத்தகங்கள்தான் நல்ல நண்பன் என்பது அறிஞர் கூற்று. மூடப்பட்டுள்ள நூலகங்களில் உள்ள பழுதினை நீக்கி, தேவையான புத்தகங்களை வழங்கி செயல்பட வைத்தால் மட்டுமே கிராமப்புறங்களில் அவை அமைக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் நிறைவேறும். இல்லையெனில் அரசு நிதி வீணாவதை தடுக்க முடியாது என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
உளுத்திமடை முத்துப்பாண்டி, "உளுத்திமடை ஊராட்சிக்கு வாகைக்குளத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் இந்த நூலகம் பயன்பாட்டிற்கு வந்ததில்லை. வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. உளுத்திமடையில் படித்த இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இங்கு நூலகம் அமைத்து செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால் பயனுள்ளதாக இருக்கும். மாவட்டம் முழுக்க இப்பிரச்னை உள்ளது. இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிராமங்களில் மூடப்பட்டுள்ள நூலகங்களை செயல்பட வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
