UPDATED : செப் 04, 2014 12:00 AM
ADDED : செப் 04, 2014 11:17 AM
உடுமலை: உடுமலையில் நடந்த, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான மாநில அளவிலான திறனறியும் விளையாட்டு போட்டி நிறைவடைந்தது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 750 தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, மாநில அளவிலான திறனறியும் விளையாட்டு போட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இதன் நிறைவு விழாவில், உடுமலை அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி மேஜர் ராமலிங்கம் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சொக்கப்பன் தலைமை வகித்தார். உடுமலை விசாலாட்சி கல்லூரி முதல்வர் சுகுணா முன்னிலை வகித்ததார். போட்டி முடிவுகளுக்கான அறிக்கையை கோவை மண்டல தேசிய மாணவர் படை அதிகாரி கர்னல் மேத்யூஸ் வெளியிட்டார்.
அதில், திருச்சி கல்லூரி மாணவர்கள் 166 புள்ளி, புதுச்சேரி மாணவர்கள் 138, மதுரை அணி 122 புள்ளிகள், கோவை அணி 111, சென்னை ஏ அணியினர் 108, சென்னை பி அணியினர் 95 புள்ளிகள் பெற்றுள்ளனர். இதையடுத்து, ஆறு மண்டலங்களில் இருந்தும் சிறப்பாக விளையாடிய மாணவர்கள், தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி அணியில் இருந்து 47 பேர், புதுச்சேரியில் இருந்து 42, மதுரையில் இருந்து 33, கோவை மாணவர்கள் 18 பேர், சென்னை ஏ அணியில் 8 மற்றும் சென்னை பி அணியில் 8 மாணவர்கள் என மொத்தம் 157 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இம்மாணவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகளின் மூலம் கோவையில் மேலும் பயிற்சி அளிக்கப்படும். சிறப்பாக விளையாடும் 125 மாணவர்கள் தேசிய அளவிலான திறனறிதல் விளையாட்டு போட்டிக்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
