பார்வையற்ற மாணவர்களுக்கு பிரைல் முறைப்படி பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை: கல்வியாளர்கள்
பார்வையற்ற மாணவர்களுக்கு பிரைல் முறைப்படி பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை: கல்வியாளர்கள்
UPDATED : செப் 04, 2014 12:00 AM
ADDED : செப் 04, 2014 01:05 PM
கோவை: பார்வையற்ற மாணவர்களுக்கு, பிரைல் முறைப்படி பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பிரைல் முறையிலான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் திட்டத்தினை அமல்படுத்தியும் பலனில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்வையற்ற மாணவர்களுக்கு, கல்விப்பாடத்திட்டங்களை தொடுதல் உணர்வு மூலமாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, பிரைல் முறைப்படி கருத்தியல் பகுதியும், டிரைலர் முறைப்படி கணித சூத்திரங்களும் கற்பிக்கப்படும். இதன்வாயிலாக பாடத்திட்டங்களை புரிந்து கொள்ளும் மாணவர்கள், தேர்வை சிறப்பு ஆசிரியர்கள் உதவியோடு எதிர்கொள்கின்றனர்.
இதற்காக, தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பார்வையற்ற மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. கோவை மாவட்டத்தில், பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு துவக்கப்பள்ளி, உளியம்பாளையத்தில் உள்ளது.
இதுதவிர, ஒருங்கிணைந்த கல்விமுறை, 12 பள்ளிக்கூடங்களில் இயங்கி வருகிறது. இங்கு, சாதாரண மாணவர்களோடு, பார்வையற்ற மாணவர்கள், மன ரீதியாக பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இணைந்தே கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டத்தில், படைப்புத்திறன் கற்றல், செய்முறை வழி கற்றலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாதாரண மாணவர்களுக்கு புரியும் சொற்கள், பார்வையற்ற மாணவர்களுக்கு தொடுதல் உணர்வை ஏற்படுத்தியே கற்பிக்க வேண்டும். இதை எடுத்துரைக்க, ஒருங்கிணைந்த பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டும், பிரைல் மற்றும் டிரைலர் முறைப்படி கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவிர, பார்வையற்ற மாணவர்களுக்கான, கல்வித்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் கூட முறைப்படி இல்லை. பிரைல் முறையை அறிந்த சிறப்பு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவே. இதனால், கற்பித்தல் முறை பெயரளவில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரைல் முறையை முழுமையாக அறியாமலே, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள், வகுப்பு பாடங்களை ரெக்கார்டரில் பதிவு செய்து எழுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி எழுதுவதன் வாயிலாக, இலக்கண பிழை, கருத்துப்பிழை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதோடு, மற்றவர்களின் உதவியோடே புத்தகங்கள் படிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. துவக்க நிலையிலான கல்விமுறையில், சிக்கல்கள் நீடிக்கும் பட்சத்தில், பிரைல் முறையிலான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதால், எவ்வித பலனும் இல்லை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்வையற்றோர் உரிமைக்காக போராடும் சங்க அமைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், "மத்திய அரசின் சார்பில், பார்வையற்றோரின் கல்விக்காக, பிரைல் முறைப்படி பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதற்காக, கோவை மாவட்டத்துக்கு மட்டும், 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க திட்டம் தான் என்றாலும், பிரைல் கல்விமுறையையே அறியாத மாணவர்களுக்கு, புத்தகங்கள் அச்சடித்து தருவதால் பலனில்லை.
துவக்க நிலையிலான கல்விமுறை சரியாக இருந்தால்தான், உயர்கல்விக்கு அடியெடுத்து வைக்க முடியும். மாவட்டந்தோறும் உள்ள ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் செயல்படும் பள்ளிகளின் நிலையை, ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். கோவை மாவட்டத்தில், நுாற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவர்கள் படிப்பதால், அரசு துவக்க சிறப்பு பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்" என்றார்.
