UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 12:11 PM
இன்று, ஆசிரியர் தினம். எழுத்தறிவிக்கும் இறைவனுக்கான நாள். நல்ல சமூகத்தை உருவாக்கும் ஒப்பற்ற பொறுப்பு, ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர் பணியின் சிறப்பும், மகத்துவமும் நாம் அறியாதது அல்ல.
ஆனால், அப்பணியில் இருந்து ஓய்வு பெற்று, 94 வயதில் நான்கு தலைமுறைகளுடன் வசிக்கும் முதுபெரும் ஆசிரியை ஒருவர் அனுபவங்களை பங்கிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயமாக ஆசிரியர்களுக்கு அறிவுரையாகவும், மாணவர்களுக்கு ஆசியாகவும் அமையும்தானே! அதன் விளைவே, இந்த கட்டுரை.
மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஆசிரியை குமாராயி. பணியில் இருந்து ஓய்வுபெற்று, 34 ஆண்டுகள் ஆகிவிட்ட இவருக்கு, இப்போது வயது 94.
மலரும் நினைவுகளை, டீச்சரம்மா குமாராயி கூறுகிறார்...
நான் படித்தது, மதுரை கிறிஸ்தவ கான்வென்டில். விடுதியில் வெள்ளைக்காரர்கள், பள்ளியில் சிஸ்டர்கள் கற்பித்தனர். ஒன்பதாம் வகுப்புக்குப் பின், ஆசிரியை பயிற்சி. கடந்த 1941ல் பணியில் சேர்ந்தேன். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பாடங்களையும் நடத்துவேன். மாதம் 385 ரூபாய் சம்பளம். 1948ல் திருமணம் நடந்தது.
ஆசிரியரான கணவர் சக்கரை சிவனாண்டிக்கும், அதே சம்பளம் தான். பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். சொந்த ஊர் செக்கானூரணி அருகில் பாறைப்பட்டி. நான் விளாச்சேரி, அப்பன் திருப்பதி, அலவாக்கோட்டை, காதக்கிணறு, மங்களக்குடி என ஆர்.சி., பள்ளி, டிஸ்டிரிக்ட் போர்டு நடத்திய கள்ளர் பள்ளிகளில் பணியாற்றினேன். பஸ் வசதி இல்லாததால், பள்ளிக்கு நடந்தே செல்வேன். அரைமணி நேரத்தில் பள்ளிக்கு சென்று விடுவேன்.
உடல் ஆரோக்கியம் எப்படி?
அப்போது சோளம், கம்பு, கேழ்வரகு, கஞ்சி போன்றவைதான் எங்கள் உணவு. வாரத்தில் ஒருநாள் சந்தையில் இருந்து வாங்கி வரும் அரிசிச் சோறும் உண்டு. ஒரு கிலோ அரிசி, 1.50 ரூபாய். மாடுகள் இல்லாத வீடுகளே கிடையாது. எங்கள் வீட்டில் இரண்டு பசு, ஒரு எருமை இருந்தன. இவற்றை வைத்தும், ஆசிரியப் பணியில் கிடைத்த சொற்ப சம்பளத்திலும் நான்கு மகன்கள், மூன்று மகள்களை படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கினோம்.
நடையும், சத்தான உணவும் தான், இன்றும் எனக்கு ஆரோக்கியத்தை தந்துள்ளது. நான் அதிகமாக மருத்துவமனைக்கு சென்றதில்லை. கடைசி குழந்தை தவிர மற்ற அனைவரும், வீட்டில்தான் பிறந்தனர். கடைசி மகன் தேவதாஸ் மட்டுமே, மருத்துவமனையில் பிறந்தான்.
படிப்பது பொழுதுபோக்கு
எனக்கு சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும், தினமலர் நாளிதழை கண்ணாடி அணியாமல் படிப்பேன். எனக்கு தெரியாத விஷயங்கள் குறித்து மகனிடமோ, பேரன்களிடமோ கேட்டு தெரிந்து கொள்வேன். எப்போதும் படித்துக் கொண்டிருப்பதே என் பொழுதுபோக்கு. அக்காலத்தில், பேசாத படத்திற்கு போவோம். இன்று வீட்டுக்குள்ளேயே, டிவியில், சினிமா வந்துவிட்டது. இன்றைய குழந்தைகள், கையில் எதை எதையோ ஏந்தி, இப்படி, அப்படி தட்டி விளையாடுகின்றனர்.
அதுபற்றி, எனக்கேதும் தெரிவதில்லை. ஆனால், அன்றைய மாணவர்கள் பலர், நல்ல துணிகள் கூட இல்லாமல் பள்ளிக்கு வருவர். நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். எந்தப் பிரச்னை என்றாலும் நேரடியாகக் கூறி விடுவோம். எவரிடமும் சூது வாது கிடையாது. மாணவர்களிடம் நல்ல கண்டிப்பு காட்டுவோம். அவர்களுக்கும், ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு மரியாதை. கிராமத்தினர் ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதை தருவர். கடச்சனேந்தலில் தெருக்குழாயில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் சிலர் துணிகளை துவைப்பர். என்னைக் கண்டால், நான் ஏதாவது கூறி விடுவேனோ என்று கருதி, அதோ டீச்சர் வாராங்க... என்று கூறியபடியே அப்படியே மறைந்து விடுவர்.
இன்றைய மாணவர்கள்
இன்றைய மாணவர்கள், நல்ல அறிவாற்றலுடன் உள்ளனர். அவர்கள் வயது குறும்பு செய்யும் வயது. அதை கண்டிப்பதோடு, பெற்றோர், ஆசிரியர்கள் அன்பு காட்ட வேண்டும். மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கின்றனர்; மாணவர்கள் கட்டுப்பாடின்றி உள்ளனர் என செய்திகள் வருகின்றன. சில இடங்களில் மாணவர்களை அடித்ததில் கண் பார்வை போய்விட்டது என்றெல்லாம் செய்தி படித்துள்ளேன். என்னை பொறுத்தவரை மாணவர்களை நான் அதிகம் அடிக்கவில்லை.
சேட்டை செய்தால் கண்டிப்பேன். மாணவர்களை கண்டிக்கும்படி பெற்றோரே எங்களிடம் கூறுவர். மாணவரை கண்டிப்பது நல்லது தான். ஆனால், குச்சி இல்லாமல் கையால், பொய்யடி மெய்யடியாக இருக்க வேண்டும். மாணவர்களும் பெற்றோர், ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். கவனமுடன் பாடத்தை படிக்க வேண்டும். தெரியாததை ஆசிரியரிடம் கேட்டுப் படிப்பது நல்லது. அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்! இவ்வாறு, அவர் கூறினார்.
