வேலைவாய்ப்பு முகாமில் அட்டூழியம் செய்யும் இடைத்தரகர்கள்
வேலைவாய்ப்பு முகாமில் அட்டூழியம் செய்யும் இடைத்தரகர்கள்
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 12:16 PM
திருச்சி: திருச்சியில் அரசு துறைகள் சார்பில் தனியார் தரப்புக்காக நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், அப்பாவி படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
படித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாததால், அரசு துறைகள் சார்பில், தனியார் நிறுவன பணிக்காக வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன். குறிப்பாக, படித்து வேலையில்லாமல், தவிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க, மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்களை பங்கேற்க, படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அரசு துறைகள் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதில், பங்கேற்றால் தனியார் நிறுவனங்களில், அரசு வேலை கிடைக்கும் வரை, கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர்.
இந்த முகாம்களில் இடைத்தரகர்கள், போலி முகவரியுடன் நுழைந்து, வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்கின்றனர். பிறகு, படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை வரவழைத்து, சான்றுகள் சரிபார்ப்பு என்ற பெயரில், பணம் வசூல் செய்வது, ஒரிஜினல் கல்வி சான்றுகளை பெற்றுக்கொண்டு மிரட்டுவது, குறிப்பாக வெளியூர்களுக்கு படித்த இளம்பெண்களை வரவழைத்து நேர்க்காணல் நடத்துவது உள்ளிட்ட அநாகரிக செயல்களில் இடைத்தரகர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் புகார் கொடுத்தால், மேலும் பிரச்சனை ஏற்படும் என, பயந்து ஒதுங்கி விடுகின்றனர்.
இதனால், அரசு துறைகள் சார்பில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கவும், திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
