பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்திற்கு கல்வி அதிகாரிகள் எதிர்ப்பு
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்திற்கு கல்வி அதிகாரிகள் எதிர்ப்பு
UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 10:54 AM
அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படும், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. தேர்வர்கள் ஹால் டிக்கெட் பெறுவதில் இருந்து, தேர்வு முடிவு வரை, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல மாற்றங்களை தேர்வுத்துறை செய்து வருகிறது.
தேர்வர்களின் விடைத்தாளில், ரகசிய குறியீடு எண், தேர்வர் போட்டோ, 32 பக்க விடைத்தாளை தைத்து கொடுத்தல், சீரியல் எண் உள்ளிட்ட மாற்றங்களை, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த, தனித்தேர்வில் அறிமுகப்படுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம், கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தியது.
தேர்வு மையங்களை கண்காணிக்க, முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வுத்துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், தேர்வு அறையில், அறை கண்காணிப்பாளர், இரண்டு அறைக்கு, தலா, ஒரு பறக்கும் படை அலுவலர், வெளிமாவட்ட பறக்கும் படை என பெரிய டீம் அமைத்து, தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்காக, வினாத்தாள் கையாளுதல் மற்றும் கண்காணிப்புக்கு என, தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு அலவன்ஸ் ரூபாய் வழங்கப்படும். பொதுத்தேர்வில் முறைகேடு மற்றும் குளறுபடி நடப்பதை தேர்வுத்துறை கட்டுப்படுத்தியதால், அடுத்தடுத்த மாற்றங்களை செய்ய தேர்வுத்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதில், மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுக்கு நடத்தப்படும் செலவினங்களை போல, ஏப்ரல் மாதம் நடத்தப்படும் 10ம் வகுப்பு தேர்வுக்கும் கூடுதல் செலவு ஆவதால், இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த இயக்குனரக அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை மற்றும் கருத்துருக்களை கேட்டுள்ளனர். ஆனால், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒரே சமயத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக காலாண்டு, அரையாண்டு தேர்வு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே தேதியில் துவங்கி நடத்தப்படுவதால், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும், ஒரே நேரத்தில் துவங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்வதால், வினாத்தாளை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லுதல், தேர்வு மையம் கண்காணிப்பு, விடைத்தாளை மொபைல் வேனில் அனுப்பி வைத்தல் ஆகிய பணிக்கு, ஒரே செலவுதான் ஆகும். தனித்தனியாக நடத்தப்படுவதால் இரண்டு மடங்கு தேர்வு செலவு ஆகிறது. ஆனால், விடைத்தாள் திருத்துதல் மட்டுமே கூடுதல் செலவாக இருக்கும்.
தேர்வுத்துறை திட்டம் ஒருபக்கம் சரியாக இருந்தாலும், இரண்டு பொதுத்தேர்வையும் ஒரே காலக்கட்டத்தில் துவங்குவதால், அதற்கான அடிப்படை கட்டமைப்பு அரசு பள்ளிகளில் இல்லை. அதேபோல், தேர்வை நடத்துவதற்கான ஆசிரியர்களை ஒருங்கிணைப்பதிலும் பிரச்னை இருக்கும். எனவே, இரண்டு தேர்வையும் ஒரே தேதியில் துவங்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

