தாய்மொழி கல்வியை வழங்குவதுடன் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை வலுப்படுத்த வலியுறுத்தல்
தாய்மொழி கல்வியை வழங்குவதுடன் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை வலுப்படுத்த வலியுறுத்தல்
UPDATED : அக் 31, 2014 12:00 AM
ADDED : அக் 31, 2014 12:07 PM
சென்னை: பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை: கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு, கல்வி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நவம்பர் 2ம் தேதி முதல், பிரசாரம் செய்கிறது.
இறுதியில், டிசம்பர் 4ம் தேதி, மத்திய பிரதேச தலைநகர், போபாலில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, கல்வி ஆர்வலர்கள் பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், பல்வேறு இடங்களில் பிரசாரம் நடக்கிறது.
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது; மாவட்டந்தோறும், மத்திய பல்கலை துவக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். இவ்வாறு பிரின்ஸ் கூறியுள்ளார்.

