அரசு போக்குவரத்துக்கழகத்தில் 764 பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
அரசு போக்குவரத்துக்கழகத்தில் 764 பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 12:18 PM
மதுரை: மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 764 காலியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்களை வாங்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
போக்குவரத்துக் கழகங்களில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் அழைத்து பணிநியமனம் நடந்தது. இத்துறையில் பணிநியமனம் தொடர்பான வழக்குகளின்போது, வெளிப்படையான தன்மை இருக்க அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் சமீபத்தில் நேரடி நியமன அறிவிப்பு வெளியானது. இதில் உதவி பொறியாளர் 22, சேம ஓட்டுனர் 259, நடத்துனர் 409, இளநிலை உதவியாளர் 17, இளநிலை தொழில் வினைஞர் 57 பேர் நியமிக்க உள்ளதாகவும், நவ.,20 வரை விண்ணப்பம் விநியோகம், டிச.,8 ம்தேதி விண்ணப்பிக்க இறுதிநாள் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோடு தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற பலநூறு பேர் நேற்று குவிந்தனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ’மதுரையில் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை எதிர்பார்த்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக 480 பேர் காத்திருக்கின்றனர். தவிர 4 ஆயிரம் பேர் தினக்கூலி அடிப்படையில் காத்திருக்கின்றனர். இவர்கள் யாரையும் நிரந்தரம் செய்ய விரும்பாமல், புதிய பணிநியமனம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
நேரடி நியமனம் என்பதால் இதில் அரசியல் தலையீடும் இருக்கும். ஏற்கனவே வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளவர்கள் கோர்ட்டுக்கு போகலாமா என ஆலோசிக்கும் நிலையில், இந்நியமனம் எந்தளவு சாத்தியம் எனத் தெரியவில்லை’ என்றனர். சில தொழிற்சங்கங்களும் இதனை தகவல் பலகையில் எழுதி வைத்திருந்தன.

