பயன்பாடற்ற பள்ளிக் கட்டடத்தால் பயத்தில் குழந்தைகள்
பயன்பாடற்ற பள்ளிக் கட்டடத்தால் பயத்தில் குழந்தைகள்
UPDATED : நவ 07, 2014 12:00 AM
ADDED : நவ 07, 2014 11:59 AM
உத்திரமேரூர்: குண்ணவாக்கத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது குண்ணவாக்கம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகாமையில், பழுதடைந்த நிலையில், பயன்பாடற்ற பழைய பள்ளி கட்டடம் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம், தற்போது சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற நிலையில் உள்ளது.
மேலும், மழை மற்றும் வேகமாக காற்று வீசும் நேரங்களில் பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகள் பிரிந்து, அவ்வப்போது கீழே விழுந்து வருகின்றன. பழைய பள்ளி கட்டட வளாகத்தின் வழியாகத்தான் மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வருவதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என, பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், "இப்பள்ளியில் விளையாட்டு மைதானத்திற்கு தனியாக இடம் இல்லாததால், வகுப்பு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், பாழடைந்த இந்த பழைய பள்ளியின் கட்டட பகுதியில்தான் பிள்ளைகள் விளையாடி வருகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் கட்டடம் உள்ளதென மாணவர்களுக்கு புரிவதில்லை.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், பாழடைந்த பள்ளி கட்டடத்தை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

