sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களே, ஹெவி மெட்டல் மோதிரங்களை அணியாதீர்!

/

மாணவர்களே, ஹெவி மெட்டல் மோதிரங்களை அணியாதீர்!

மாணவர்களே, ஹெவி மெட்டல் மோதிரங்களை அணியாதீர்!

மாணவர்களே, ஹெவி மெட்டல் மோதிரங்களை அணியாதீர்!


UPDATED : நவ 08, 2014 12:00 AM

ADDED : நவ 08, 2014 10:41 AM

Google News

UPDATED : நவ 08, 2014 12:00 AM ADDED : நவ 08, 2014 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும், தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற அணிகலன்கள், காலணிகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், பலவிதமான வண்ணங்களிலும், டிசைன்களிலும் வரும் ஹெவி மெட்டல் மோதிரங்களை அணிவது, தமிழகத்தில் சமீபத்திய பேஷன்  ஆகியுள்ளது.

வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் இந்த மோதிரங்கள், பேன்சி கடைகளில் மட்டுமின்றி, எல்லாக் கடைகளிலுமே கிடைக்கின்றன. ஆடைக்கேற்ப, பல வண்ணங்களில், மிகக்குறைந்த விலையில் இவை கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், விரும்பி அணிகின்றனர். அழகுக்காக அணியும் இந்த மோதிரங்கள், எவ்வளவு அபாயமானவை என்பதை, இளம் தலைமுறையினர் உணர்வதில்லை.

மிகவும் கனமாகவுள்ள இந்த மோதிரங்களை, டைட் ஆக அணியும்போது, அந்த இடத்தின் மேல் பகுதிக்கு, ரத்த ஓட்டம் பாய்வது தடுக்கப்படுகிறது. அதனால், அந்த விரல் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தன்மையை இழக்கிறது. சில நேரங்களில், இந்த மோதிரம் அணிந்துள்ள விரல்களில் அடிபட்டால், விரல் பெரியளவில் வீங்கி விடுகிறது. தங்கம், வெள்ளி போன்ற மோதிரங்களாக இருந்தால், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள ரிங் கட்டர் எனப்படும் கத்தரிக்கோலால், அந்த மோதிரத்தை டாக்டர்கள் சாதுர்யமாக வெட்டி எடுத்து விடுகின்றனர். ஆனால், இந்த மோதிரங்களை, எந்த கட்டர் வைத்தும் வெட்ட முடியாது.

அது மட்டுமின்றி, இந்த மோதிரம் அணிந்துள்ள விரல், தற்செயலாக ஏதாவது ஒரு இடுக்கிலோ, துளையிலோ, கம்பிகளுக்கு இடையிலோ சிக்கிக்கொண்டால், வேகமாக விரலை எடுக்கும்போது, விரலில் இருந்து மோதிரம் கழறுவதில்லை. மாறாக, விரலில் உள்ள சதை, நரம்பு எல்லாவற்றையும் எடுக்கும் அளவுக்கு, இந்த மோதிரங்கள் மிகக் கடினமாகவுள்ளன.

பண்ணாரியைச் சேர்ந்த மனோஜ் குமாரின் மகன் மணி மதன், 15, அங்குள்ள ராஜன் நகர் கஸ்தூரிபாய் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். நண்பன் கொடுத்த ஹெவி மெட்டல் மோதிரத்தை அணிந்து கொண்டு, பள்ளிப் பேருந்தில் திரும்பும்போது, மோதிரம் அணிந்திருந்த விரல், பஸ்சின் இடுக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டது.

அருகிலிருந்த மாணவர்கள் சிலர், தங்களது பலத்தைப் பிரயோகித்து, இடது கையை வேகமாக இழுக்க, சதை, நரம்பு எல்லாம் மோதிரத்துடன் போய்விட, எலும்புள்ள விரல் மட்டும் கையோடு வந்துள்ளது. உடனடியாக, சத்தியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று, அதே இடது கையிலிருந்து சதை, நரம்பு எல்லாம் எடுத்து, இந்த விரலில் வைத்துத் தைக்க முயன்றுள்ளனர்.

ஆனால், விரலில் முற்றிலுமாக ரத்த ஓட்டம் நின்று போனதால், அந்த சிகிச்சை பலன் தரவில்லை. முற்றிலும் கருப்பாகி, விரலே அழுகியதுபோலாகி விட்டது. கோவை ராம்நகரில் உள்ள குளோபல் எலும்பு மருத்துவமனையில், அந்த விரல் அகற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக, இதேபோன்ற மோதிரம் அணிந்து, விரல் வீங்கிய நிலையில் வந்த மாணவியின் விரல், இதே மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது.

அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, BURR என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி, மோதிரத்தை அறுத்து எடுத்து, விரலைக் காப்பாற்றியுள்ளனர். இதே மருத்துவமனையில், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 9 பேர், இந்த மோதிரத்தால் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். அவர்களில், இந்த மாணவன் உட்பட இருவரது விரல்களைக் காப்பாற்ற முடியவில்லை.

குளோபல் மருத்துவமனையின் தலைமை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் கூறுகையில், "இதற்காக, சிகிச்சைக்கு வந்த எல்லோருமே, 20 வயதுக்குட்பட இள வயதினர்தான். வெறும் 10 ரூபாய் மோதிரம் என்பதற்காக, இதை வாங்கி அணிவதால், விரலையே பறிகொடுக்க வேண்டிய அபாயம் உள்ளது. பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களது குழந்தைகள் இந்த மோதிரங்களை அணிவதைத் தடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், இதனை நேரடியாக அறிவித்து, இதுபோன்ற மோதிரம் அணிந்து வருவதைத் தடை செய்தால் நல்லது" என்றார்.






      Dinamalar
      Follow us