பயிற்சிகால ஊதியம் கிடைக்காததால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் திணறல்
பயிற்சிகால ஊதியம் கிடைக்காததால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் திணறல்
UPDATED : நவ 26, 2014 12:00 AM
ADDED : நவ 26, 2014 01:08 PM
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஆறு மாதங்களாக, பயிற்சிகால ஊதியம் கிடைக்காததால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.எஸ்., - எம்.டி., படிக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் முதல், 27 ஆயிரம் ரூபாய் வரை, பயிற்சி கால ஊதியத்தை, அரசு வழங்கி வருகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, ஆறு மாதங்களாக, பயிற்சி கால ஊதியத்தை தராமல், நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
இதனால், விடுதிக் கட்டணம் செலுத்தவும், தேவையான நூல்கள், உபகரணங்கள் வாங்க முடியாமலும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, கல்லூரி முதல்வர்களின் கவனக்குறைவே காரணம் என, மாணவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், பயிற்சி கால ஊதியம் கிடைக்காதது பற்றி தகவல் கிடைத்ததும், உடனே தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ஓரிரு நாளில் கிடைத்து விடும்.
மற்ற கல்லூரிகளிலும் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. இதுகுறித்து, அறிக்கை தரவும் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை அகற்றவும், உடனே பயிற்சிக்கால ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
