கழிப்பிட வசதியற்ற பள்ளி - மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி
கழிப்பிட வசதியற்ற பள்ளி - மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி
UPDATED : நவ 26, 2014 12:00 AM
ADDED : நவ 26, 2014 01:14 PM
திருப்பூர்: பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாததால், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் இருந்து பிரிக்கப்பட்டு, தற்போது குமார் நகரில் செயல்படும் துவக்கப் பள்ளியில், அடிப்படை வசதிகள் இல்லை. சாமுண்டிபுரம் ரோட்டில் செயல்படும் இப்பள்ளிக்கு முருங்கபாளையம், கல்லாங்காடு, சாய்பாபா காலனி, சாமுண்டிபுரம், குமார் நகர் பகுதியை சேர்ந்த 410 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
சிறுநீர் கழிக்க இரண்டு அறைகள் மட்டுமே உள்ளன. பள்ளியில் 420 பேர் உள்ள நிலையில், கழிப்பிடத்தையும் சேர்ந்து நான்கு அறைகள் மட்டுமே இருப்பது, மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இடைவேளையின்போது, ஆசிரியர் ஒருவர் நின்று, நான்கு பேராக கழிப்பிடத்துக்கு வரிசையில் அனுப்ப வேண்டிய அவலம் உள்ளது.
பள்ளிக்காக கழிப்பிடம் கட்ட ஒப்புக்கொண்ட தனியார் நிறுவனம், முதல் தளத்தில் கட்டுமானப் பணியை துவக்கி, அறைகளை கட்டிக் கொடுத்தது. மாநகராட்சி அதிகாரிகள் குழாய்களை பொருத்தினர். ஆனால், தண்ணீர் வசதி செய்து தரவில்லை. இதனால், கழிப்பிட கட்டுமான பணி, பாதியில் நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி, போதிய கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
