சென்னை ஐ.ஐ.டி., யில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
சென்னை ஐ.ஐ.டி., யில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : டிச 02, 2014 12:00 AM
ADDED : டிச 02, 2014 12:22 PM
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., யில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் துவங்கியது. முதல் நாளான நேற்று 81 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முகாம், நேற்று அதிகாலை துவங்கியது.
நேர்காணல்
முதல் நாளான நேற்று, மூன்று பிரிவு; இன்று முதல், 5ம் தேதி வரை, தினசரி இரண்டு பிரிவு; 7ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை தினசரி ஒரு பிரிவு என, நேர அட்டவணைப்படி நேர்காணல் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த, பொறியியல், ஐ.டி., மென்பொருள், நிதி, ஆலோசனை, கல்வி மற்றும் ஆராய்ச்சி, பொதுத் துறை, அரசு மற்றும் இதர பிரிவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
762 நிறுவனங்கள்
கடந்த 2013 - 14ல், 372 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு, 762 நிறுவனங்கள், இந்த முகாமில் பங்கேற்கின்றன. முதல்நாளான நேற்று, அதிகாலை முதல், 81 பேர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, இந்திய நிறுவனங்கள், ஆண்டு சம்பளமாக, 30 லட்சம் ரூபாயும், வெளிநாட்டு நிறுவனங்கள், 80.31 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு பகல் என தொடர்ந்து, இந்த வேலைவாய்ப்பு முகாம் நடப்பதால், 15 நாட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வேலைவாயப்பு முகாம் குறித்து, ஐ.ஐ.டி., சென்னை இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது: ஆண்டுதோறும் உலகத் தரத்திலான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள், ஐ.ஐ.டி., சென்னையில் இருந்து வெளிவருகின்றனர். முதுகலை பட்டதாரிகள் மட்டுமின்றி, ஆய்வாளர்கள் பலரும், உலகின் பல்வேறு நாடுகளில், பணி வாய்ப்புகளை பெறுகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு, ஐ.ஐ.டி., சென்னை மாணவர்கள் பங்காற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
