கூடுதல் பஸ் இல்லாததால் 8 கி.மீ. நடக்கும் மாணவர்கள்
கூடுதல் பஸ் இல்லாததால் 8 கி.மீ. நடக்கும் மாணவர்கள்
UPDATED : டிச 07, 2014 12:00 AM
ADDED : டிச 07, 2014 12:57 PM
நரிக்குடி: நரிக்குடியிலிருந்து தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இல்லாததால் தினமும் எட்டு கி.மீ., நடை பயணம் மேற்கொள்ளும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
மணிக்கட்டியேந்தல், மறையூர், தர்மம், தேளி, கொட்டக்காச்சியேந்தல் கிராமங்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நரிக்குடியில் படிக்கின்றனர். மேலும் இப்பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவர்கள் நரிக்குடி வந்து பிற நகரங்களுக்குச் செல்கின்றனர். இப்பகுதி கிராம மக்களும் பல்வேறு தேவைகளுக்கு , வேலைக்கு நரிக்குடி வருகின்றனர்.
ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லை. தேளி, தர்மம் வழியில் 6 மணிக்கே பஸ் வந்து விடுகிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் செல்ல முடியாது. அதேபோல், மாலையில் நான்கு மணிக்கு நரிக்குடியில் இருந்து அரசு பஸ் கிளம்பி விடுகிறது. ஆனால் பள்ளி முடிய 4.30 மணியாகிறது. இதனால் இரண்டு வேளையுமே மாணவர்கள் எட்டு கி.மீ., வரை நடக்கின்றனர்.
இதனால் அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும் பயனில்லை. நரிக்குடியிலிருந்து தர்மம், தேளி வழியாக மானாமதுரை 22 கி.மீ., ஆகும். இந்த வழித்தடத்தில் மறையூர், தர்மம், தேளி உட்பட 15 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியே 2 முறை மட்டுமே வரும் பஸ்சால் எந்த பயனுமில்லை. வேலைக்கு சென்றுவரும் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப் படுகின்றனர்.
நரிக்குடியிலிருந்து தேளி வழியாக பத்து ரூபாய் செலவில் 22 கி.மீ., தூரத்தில் மானாமதுரை செல்வதற்குப் பதில், பஸ் வசதி இல்லாத காரணத்தால் பார்த்திபனூர் வழியாக 20 ரூபாய் செலவில், 32 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பணம் செலவாவதுடன் நேரமும் அதிகமாகிறது. மாணவர்கள் பயன்படும் வகையில் காலை மற்றும் மாலையில் பள்ளி நேரத்திற்கு ஏற்ப பஸ் இயக்க வேண்டும். அதே சமயத்தில் அனைவரும் பயனடையும் வகையில் நரிக்குடியிலிருந்து, தேளி வழியாக மானாமதுரைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
