மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
UPDATED : டிச 08, 2014 12:00 AM
ADDED : டிச 08, 2014 11:22 AM
கோவை: கோவை, அவினாசிலிங்கம் பல்கலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 82 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காது கேளாதோர், பார்வையற்றவர், உடல் ஊனமுற்றவர், மனவளர்ச்சி குன்றியவர்கள் என, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. காதுகேளாத மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பிரிவில், லெமன் அண்ட் ஸ்பூன் மற்றும் கபடி போட்டிகள் நடந்தன.
இதில், லெமன் அண்ட் ஸ்பூன் போட்டியில் பெண்கள் பிரிவில், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்துமதி மற்றும் அப்ரின்; ஆண்கள் பிரிவில், டி.எல்.சி., மிடில் பள்ளி மாணவர்கள் பூபதிராஜா, அப்ரார் முறையே, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். பார்வையற்றோர் மாணவர்களுக்கான பிரிவில், குண்டு எறிதல், அடாப்ட் வாலிபால் போட்டி நடந்தது. குண்டு எறிதலில் அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிதா, டி.எல்.சி., நடுநிலை பள்ளி மாணவி அருள்மேரி முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர்.
உடல் ஊனமுற்றோர்களுக்கான பிரிவில், செஸ், கேரம் போட்டி நடந்தது. செஸ் போட்டியில், டே கேர் மைய மாணவன் சுமித்குமார், அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுரி முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பிரிவில், ஷாக் நடை, உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஷாக் நடை போட்டியில், அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ரதீஷ் மற்றும் அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய்லோகேஸ்வரி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை வென்றனர்.
தொடர்ந்து, அனைத்து பிரிவிலும் நடந்த கபடி, வாலிபால், கேரம், உருளைக்கிழங்கு சேகரித்தல் உள்ளிட்ட குழு போட்டியில், அனைத்து பள்ளி மாணவர்களையும் சேர்த்து, குழு பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் ஒற்றுமை குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டன. இறுதியில், வெற்றி பெற்ற மாணவர்கள், தங்களாலும் கல்வி அல்லாது விளையாட்டிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தனர்.
