மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம்
மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம்
UPDATED : டிச 13, 2014 12:00 AM
ADDED : டிச 13, 2014 12:04 PM
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படிக்கும், மருத்துவ மாணவர்கள், 179 பேர், கல்வி கட்டணத்தை செலுத்த, வரும் 17ம் தேதி வரை, சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதற்கென, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை பல்கலையின் உறுப்பு கல்லூரியாக, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவப் படிப்பில், கடந்த கல்வியாண்டில், மாணவர்கள் சேர்ந்தனர். தனியார் மருத்துவ கல்விக்காக நிர்ணயிக்கப்பட்ட, கல்வி கட்டணத்தை, அவர்கள் செலுத்தியிருந்தனர்.
தற்போது, அரசின் கட்டுப்பாட்டின் கீழ், அண்ணாமலை பல்கலைக் கழகம் வந்துள்ளதால், தங்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே பெற வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 179, மாணவர்கள், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, தள்ளுபடி செய்து, நீதிபதி ராமசுப்ரமணியன், உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 179 மாணவர்களும், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், அண்ணாமலை பல்கலை சார்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு: மாணவர்களின் உரிமைகள் பாதிக்காத வகையில், கல்வி கட்டணத்தை செலுத்த, 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
வரும், 17ம் தேதிக்குள், கட்டணத்தை செலுத்த, மனுதாரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. அண்ணாமலை பல்கலை சார்பில், வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார், அரசு தரப்பில், வழக்கறிஞர் சக்திவேல், நோட்டீஸ் பெற்று கொண்டனர். மற்றவர்களுக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, வரும், 18ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
