UPDATED : டிச 14, 2014 12:00 AM
ADDED : டிச 14, 2014 01:55 PM
சென்னை மாநகராட்சியின், மை லேடி பூங்கா நீச்சல் வளாகம், பெரியமேட்டில் உள்ளது. 2004ம் ஆண்டில், அப்போதைய மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார், சென்னை மாநகராட்சி நீச்சல் குழு என்ற அமைப்பை துவக்கி வைத்தார்.
அன்று முதல், பள்ளி மாணவ, மாணவியருக்கு நீச்சல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அங்கு, பயிற்சியாளராக முனியாண்டி உள்ளார். காலை, 6:00 முதல் 10:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் 8:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி பெற்றோரில், மாநில அளவில் 200 பேரும், தேசிய அளவில், 100 பேரும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, பயிற்சியாளர் முனியாண்டி கூறியதாவது: மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மேலும் மற்ற பள்ளி களில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு, இங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியருக்கும் இங்கு பயிற்சி அளிப்பதுதான் முக்கியமான அம்சம். அவர்கள், சிறப்பான முறையில் நீந்த பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவர்களை சிறப்பு (ஸ்பெஷல்) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைத்து, நம்பிக்கையை ஊட்ட முயற்சி எடுக்கிறோம். சென்னை மாநகராட்சி நீச்சல் குழு, ஆண்டுதோறும், 20 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை வழங்கி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
மூளை வளர்ச்சி குன்றிய வீரர், வீராங்கனைகளின் பெற்றோர் கூறுகையில், "இயல் முறை மருத்துவரின் ஆலோசனைப்படி, எங்கள் பிள்ளைகள், நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களிடம் தற்போது, நடப்பது, பேசுவது என முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றனர். மை லேடி பூங்கா நீச்சல் வளாகத்தில், ஏழை மாணவ, மாணவியர் இலவச நீச்சல் பயிற்சி பெற, மாநகராட்சி மேயர், ஆணையாளர், பயிற்சியாளரை அணுகலாம்.
