இலவச குரூப் - 4 மாதிரி தேர்வில் 250 பேர் பங்கேற்பு
இலவச குரூப் - 4 மாதிரி தேர்வில் 250 பேர் பங்கேற்பு
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 10:40 AM
உடுமலை: உடுமலையில் நடைபெற்ற இலவச குரூப் - 4 மாதிரி தேர்வில் 250 பேர் பங்கேற்றனர்.
உடுமலை கிளை நூலகம்-1 வாசகர் வட்டம் சார்பில், போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, குரூப் - 4 தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இறுதி கட்ட பயிற்சியாக, மாதிரி குரூப்-4 தேர்வு, உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் வினாக்களை உள்ளடக்கி, 200 மதிப்பெண்களுக்கு முதற்கட்ட தேர்வு, மதியம் 2:00 முதல் 5:00 மணி வரை, நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கி, 200 மதிப்பெண்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது.
நூலக வாசகர் வட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். கோட்டமங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி முன்னிலை வகித்தார். நூலக வாசகர் வட்ட தலைவர் லெனின் பாரதி, தேர்வை துவக்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் தினேஷ் ராகவன், தேர்வு வினாக்களை தொகுத்திருந்தார். உடுமலை, குடிமங்கலம், மடத்துகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 250 பேர் பங்கேற்றனர்.
