UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 11:08 AM
ஆர்.கே.பேட்டை: ஏரிக்கரையை ஒட்டி அமைந்துள்ள தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மழைக்காலத்தில், பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தது, அமுதாரெட்டி கண்டிகை கிராமம். கிராமத்தின் தெற்கேயுள்ள ஏரிக்கரையை ஒட்டி, அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இதில் 75 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தில் மது அருந்துகின்றனர். தண்ணீர் தொட்டியை நாசம் செய்கின்றனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால், ஏரிக்கரையில் இருந்து தண்ணீர், பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து செல்கிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஏரிக்கரைக்கும், பள்ளிக்கும் இடையே நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. சாலையில் செல்லும் வாகனங்களால், பள்ளி வளாகத்தில் விளையாடும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.
மழைநீர் மற்றும் சமூகவிரோதிகள் பள்ளிக்குள் ஊடுருவதை தடுக்கவும், விபத்து அபாயத்தை தவிர்க்கவும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
