கட்டி முடித்தும் பல மாதங்களாக திறக்கப்படாத மாணவியர் விடுதி
கட்டி முடித்தும் பல மாதங்களாக திறக்கப்படாத மாணவியர் விடுதி
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 11:09 AM
திருவள்ளூர்: அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா செல்லும் சாலையில், அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
பரிதவிப்பு
கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 62.83 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டி முடித்து மாதங்கள் பல கடந்தும், இக்கட்டடம் இதுவரை திறக்கப்படவில்லை.
ஏற்கனவே, மாணவியர் விடுதிகளில் இடம் இல்லாமல், ஏழை மாணவியர்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில் கட்டி முடித்தும், புதிய விடுதியை திறக்காததால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.
விபத்து அபாயம்
எனவே, மாணவியர் நலன் கருதி, உடனடியாக நார்த்தவாடா சாலையில் கட்டப்பட்டு உள்ள மாணவியர் விடுதியை திறக்க, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு உள்ள மாணவியர் விடுதி முன்பாக மின்கம்பம் உள்ளது. இதனால், மாணவியர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, விடுதியை துவக்குவதற்கு முன், இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
