பழங்குடியினர் பள்ளியில் அட்டூழியம் செய்யும் ஆசிரியை கைதுசெய்ய போராட்டம்
பழங்குடியினர் பள்ளியில் அட்டூழியம் செய்யும் ஆசிரியை கைதுசெய்ய போராட்டம்
UPDATED : டிச 17, 2014 12:00 AM
ADDED : டிச 17, 2014 01:34 PM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த, அமைச்சரின் உறவினரான கணித ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கண்டன போராட்டம் நடத்தினர்.
ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 388 மாணவியர் தங்கி படிக்கின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவியரிடம், 5,000 ரூபாயும், மற்ற மாணவியரிடம், 3,000 ரூபாய் வரை, வசூல் செய்கின்றனர். கணித ஆசிரியர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உடன் பிறந்த தங்கை செல்லமணி மகன் என்பதால், அவரது செயலை கண்டிக்கும் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.
ஆசிரியர் கார்த்திகேயன், மாணவியரிடம், ஆபாச செய்கை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தும், ஒரு மாணவியை, காம்பஸ் கருவியில் குத்தி காயப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் கலாமோகினி, ஆசிரியர்கள் கார்த்திகேயன், முருகேசன் ஆகியோர் மீது, கடந்த 7ம் தேதி, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள், சேலம் மாவட்ட கலெக்டரிடம், புகார் மனு அளித்தனர்.
ஆசிரியர்கள் மீது, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று ஆத்தூர் அருகே, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாபில், மலைவாழ் மக்கள் சங்க, மாநில தலைவர் சண்முகம் தலைமையில், கண்டன போராட்டம் நடந்தது.
அப்போது, மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது: பாலியல் தொந்தரவு செய்த, அமைச்சர் சுப்ரமணியன் தங்கை மகன் கார்த்திகேயன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்கவில்லை. அமைச்சரின் தலையீடு உள்ளதால், அமைச்சர் மீதும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு 14 ஆசிரியர்களில், இருவர் மட்டுமே பெண் ஆசிரியராக உள்ளனர். கடந்த 2007 முதல் உறைவிட பள்ளியில், ஆசிரியர் பணியிடம் நியமிக்கவில்லை. மலை கிராம பள்ளிகளில், ஆசிரியர் இல்லாமல், ஓராசிரியர் பள்ளியாகவே இருந்து வருகிறது. எஸ்.ஸி.,- எஸ்.டி., விடுதி மாணவர்களுக்கு, சோப்பு, எண்ணெய் வாங்க, மாதம் 50 ரூபாய் வழங்கப்பட்டது.
அமைச்சர் சுப்ரமணியன், இத்தொகையை 2011 முதல் நிறுத்தி வைத்தபோதும், அதற்கான அரசாணை வெளியிடவில்லை. ஆண்டுக்கு தலா 1 மாணவருக்கு 600 ரூபாய் வீதம், யாருக்கு போகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணையால் இத்தொகை கிடைக்கவில்லை. மலைவாழ் மக்களின் போராட்டத்தால் வழங்கப்பட்டது.
எஸ்.டி., சான்று வழங்கும் கூர்நோக்கு குழு, லட்சக்கணக்கில் கொள்ளையடித்து வருகிறது. இந்த ஆட்சியில், அரசு அலுவலர் பணி நிரந்தரம், இடமாறுதல் பணிகளுக்கு, அமைச்சர் உள்ளிட்டோர் தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். மாணவியரின் பாதுகாப்புக்கு நடத்தும் போராட்டத்துக்கு கூட போலீஸார் அனுமதி மறுக்கின்றனர். இவ்வாறு கூறினார்.
