UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 11:15 AM
சென்னை: மெட்ரோ ரயில் திட்ட பணியால், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லுாரி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என, கல்லுாரி முதல்வருக்கு, பொதுப்பணி துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால், கல்லுாரியை வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, பாரிமுனையில் உள்ள, உயர்நீதிமன்ற கட்டடம், இந்தோ - சார்சானிக் கட்டட கலை அடிப்படையில், 13 லட்சம் ரூபாய் செலவில் 1888 முதல் 1892 வரை கட்டப்பட்டது. இதில், உயர்நீதிமன்றங்கள், செஷன்ஸ் நீதிமன்றங்கள், அம்பேத்கர் சட்டக் கல்லுாரி ஆகியன இயங்கி வருகின்றன. தற்போது, சென்னை மெட்ரோ ரயிலுக்கான பணிகள், பாரிமுனை பகுதியில் நடந்து வருகின்றன.
இதில், அம்பேத்கர் சட்டக் கல்லுாரி இயங்கும் பகுதியின் அருகில், மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால், சட்ட கல்லுாரி இயங்கும் கட்டடத்தின், தரை, மேற்கூரை, சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து, பொதுப்பணி துறையினர் ஆய்வு நடத்தினர்.
அதன்பின், கல்லுாரி முதல்வருக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், கட்டடத்தில், மெட்ரோ ரயில் பணிகளால், விரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம், சில தற்காலிக ஏற்பாடுகள் மூலம், சிமென்ட் பூச்சு மூலம் விரிசல்களை சரிசெய்ய முயன்றுள்ளது என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பொதுப்பணி துறை அதிகாரிகளும், சென்னை உயர்நீதிமன்ற புராதன கட்டட குழுவும் இணைந்து நடத்திய ஆய்விற்கு பின், கல்லுாரி கட்டடத்தை முழுவதுமாக பழுது பார்த்த பின் பயன்படுத்தலாம் என, அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லுாரியை வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
